மாவேலிக்கரா: கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது மாவேலிக்கரா கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம்.
ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கேரள பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்தார். வழக்கறிஞரும் கூட. இந்நிலையில் கடந்த 2021, டிசம்பர் 19 ஆம் தேதியன்று ஆலப்புழாவின் வெல்லக்கிணறு பகுதியில் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவரது தாய், மனைவி, மகள் கண் முன்னே இந்தக் கொலை நடந்தது.
இந்த வழக்கை விசாரித்த மாவேலிக்கரா கூடுதல் மாவட்ட செசன்ஸ் முதலாவது நீதிமன்ற நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவி, இது அரிதினும் அரிதான வழக்கு என்று கூறி 15 பேருக்கும் மரண தண்டனை வழங்கினார். நைசம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், அப்துல் கலாம் என்ற சல்மான், அப்துல் கலாம், சஃபருதின், மன்ஷத், ஜஸீப் ராஜா, நவாஸ், சமீர், நசீர், ஜாகிர், ஹுசைன், ஷாஜி, ஷ்ரேனாஸ் அஷ்ரப் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஆலப்புழாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்பு கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். மேலும் அதன் அரசியல் அங்கமான எஸ்டிபிஐ அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்களாக அறியப்படுகிறார்கள். இந்நிலையில் இந்தத் தீர்ப்பை ரஞ்சித் ஸ்ரீனிவாசனின் குடும்பத்தினர் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ரஞ்சித் கொலை தொடர்பாக நடந்த போலீஸ் விசாரணையில் அந்தக் கொலை சம்பவமானது, எஸ்டிபிஐ மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான் கொலைக்கு பதிலடியாக நிகழ்த்தப்பட்டதாகத் தெரியவந்தது. ஷான் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டார். 2021 பிப்ரவரியில் ஆலப்புழாவில் கொலை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் நந்துகிருஷ்ணா கொலைக்கு பழிவாங்க ஷான் கொல்லப்பட்டார். ஷான் கொலைக்கு பதிலடியாக ஸ்ரீனிவாசன் ரஞ்சித் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.