அஜித் படம் தான் அடுத்து என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். விக்னேஷ் சிவனும் பரபரப்பாக ஸ்கிரிப்டில் மூழ்கியிருந்தார். ஏனோ அந்த ப்ராஜெக்ட் நடக்கவில்லை.
அதைக் கடந்த விக்னேஷ் சிவன் அடுத்து வேறு ஸ்கிரிப்டை கையிலெடுத்தார். அதில் வந்து சரியாக உட்கார்ந்தார் பிரதீப் ரங்கநாதன். ‘லவ் டுடே’க்குப் பிறகு எல்லோரும் ஆசை ஆசையாக பிரதீப்பை எதிர்பார்க்க, அவர் வந்துசேர்ந்ததோ விக்னேஷ் கைகளில். அப்படி தீர்க்கமான ஸ்கிரிப்ட்டை எழுதியிருந்தார் சிவன்.

சத்தமே போடாமல் பிரதீப்பை அழைத்துக் கொண்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் இருக்கும் வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்திற்கே போய்விட்டார். அங்கேயே ஏழு நாள் ஷுட்டிங் மங்களகரமாக நடத்த ஆரம்பித்து விட்டார். அத்தனை நாட்களிலும் சீமான் பிரதீப்பின் அப்பாவாக பிரமாதமாக நடித்தது தான் இப்போது வரைக்கும் யூனிட் காரர்களால் பேசப்படுகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு கேரக்டர் ரோல் சான்ஸ் குவியுமாம். மொத்த யூனிட்டும் கைதட்டிப் பாராட்டிய இடங்கள் எக்கச்சக்கமாம்.
அதோடு படப்பிடிப்பு முடிந்த பிறகு சீமான் ஆசிரமம் முழுவதும் சுற்றிப் பார்த்தாராம். அங்கேயிருந்த மக்களிடம் போய் பேசிக்கொண்டு இருந்தாராம். ஜக்கி வாசுதேவின் சீடர்களிடமும் பேசியிருக்கிறார். இன்னும் அங்கே படப்பிடிப்பு பாக்கியிருப்பதால் அடுத்த மாதம் அங்கே மறுபடியும் யூனிட் செல்கிறது. அப்போது ஜக்கி வாசுதேவ் – சீமான் சந்திப்பு நடக்கலாம் எனப் பேசிக்கொள்கிறார்கள்.

அங்கே இதுவரை சினிமாவிற்கான படப்பிடிப்பு நடந்ததே இல்லை. முதன் முதலில் ஆசிரம நிர்வாகம் அனுமதி கொடுத்ததே பெரும் ஆச்சர்யம் என்கிறார்கள். கங்கனா ரணாவத் கேட்டும் கொடுக்காத அனுமதியை விக்னேஷ் சிவனுக்கு கொடுத்ததும் டைரக்டர் நெகிழ்ந்து விட்டாராம். படக்குழுவினருக்கு எந்த இடைஞ்சலும் வராமல் நல்லபடியாக பார்த்துக்கொண்டதில் யூனிட் சந்தோஷத்தில் மிதக்கிறது. படத்தில் முக்கிய காட்சிகள் மேலும் ஆசிரமத்தில் படமாகும் என்கிறார்கள்.