புதுடில்லி,புதுடில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்ற நிலையில், குடவோலை தேர்தல் முறையை பிரதிபலித்த தமிழகத்தின் அலங்கார ஊர்தி மூன்றாம் பரிசுக்கு தேர்வாகி உள்ளது.
புதுடில்லியில், கடந்த 26ம் தேதி குடியரசு தின விழா விமரிசையாக நடந்தது. விழாவின் சிறப்பம்சமாக நம் நாட்டின் பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு கடமை பாதையில் நடந்தது.
இதில் தமிழகம், ஆந்திரா, மணிப்பூர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இவை தவிர மத்திய அமைச்சரவையின் ஒன்பது அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
இதில் சிறப்பான ஊர்தி களை இரு பிரிவுகளின் கீழ் தேர்வு செய்து பரிசு வழங்குவர்.
ஒன்றை நடுவர் குழுவினர் இறுதி செய்வர். இரண்டாவது பிரிவில் மக்கள் ஓட்டுகளின் அடிப்படையில் சிறந்த ஊர்திகள் தேர்வு செய்யப்படும்.
இதன்படி, தமிழகம் சார்பில் அணிவகுப்பில் இடம்பிடித்த, ‘பழந்தமிழகத்தின் குடவோலை முறை – மக்களாட்சியின் தாய்’ என்ற கருப்பொருள் அடிப்படையிலான அலங்கார ஊர்தி, நடுவர் குழுவினரால் மூன்றாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கைவினை மற்றும் கைத்தறி துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஒடிசா சார்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்தி முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
டோர்டோ சுற்றுலா கிராமத்தை பிரதிபலித்த குஜராத்தின் அலங்கார ஊர்தி இரண்டாம் பரிசையும், மக்கள் தேர்வில் முதலிடத்தையும் பிடித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement