அஜித், மகிழ்திருமேனியின் கூட்டணியில் உருவாகிவரும், ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு மீண்டும் வேகம் எடுத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஜர்பைஜானில் ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு தொடங்கியது.
வெளிநாட்டிலேயே ஒரே மூச்சாக நடத்தத் திட்டமிட்டனர். ஆனால், இடையே பிரேக் விட்டதில், சென்னை திரும்பினார்கள். இப்போது மீண்டும் படப்பிடிப்பு டேக் ஆஃப் ஆகியுள்ளது.

மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘விடாமுயற்சி.’ படத்தில் வில்லனாக சஞ்சய்தத் நடித்துவருகிறார். படத்தில் அவர் தவிர, அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா கஸன்ட்ரா எனப் பலரும் நடித்துவருகின்றனர். ஆக்ஷனும் எமோஷனும் கலந்த கலவையாக படம் உருவாகிவருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் சென்னை திரும்பிய படக்குழு, சில நாள்களுக்கு முன்னர்தான் அஜர்பைஜான் சென்றடைந்தது. அங்கே பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது என்றும், வின்டர் சீசன் என்பதாலும் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அஜர்பைஜானில் உள்ள ஒரு சில இடங்களில் பனிப்பொழிவு கிடையாது என்பதால், படப்பிடிப்பை புதியதொரு இடத்தில் மாற்றியுள்ளனர். இந்த ஷெட்யூலில் அஜித்துடன் ஆரவ், ரெஜினா உட்பட சிலரது காம்பினேஷனில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. சுப்ரீம் சுந்தரின் சீறிப் பாயும் ஸ்டண்ட்களும், பரபரப்பான சேஸிங் சீன்களும் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்திற்காக ஸ்லிம் ஆகியிருக்கிறார் அஜித். படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கிற்காக போட்டோஷூட்டும் நடத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

‘அறம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தின் இசையமைப்பாளர் அனிருத், ஏற்கெனவே ஐந்து பாடல்களை கம்போஸ் செய்து கொடுத்துவிட்டார், அதில் ‘ஆலுமா டோலுமா’ போல அதிரடி குத்துப்பாடலையும் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

த்ரிஷா, இப்போது மலையாளத்தில் டொவினோ தாமஸின் ஜோடியாக ‘ஐடென்டிட்டி’ என்ற படத்தில் நடித்துவருகிறார். அதைப் போல அர்ஜுன் தெலுங்கில் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். அதன் படப்பிடிப்புக்கு இடையே ‘விடா முயற்சி’க்கும் சென்றுவருகிறார் அர்ஜுன். அஜித்தின் ரசிகர்கள் ‘விடாமுயற்சி’ அப்டேட் கேட்டு வரும் சூழலில், அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர். அஜர்பைஜான் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஹைதராபாத்திலும் ஒரு ஷெட்யூல் நடக்கலாம் என்றும் சொல்கிறார்கள். பிப்ரவரியோடு படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏப்ரல் இறுதியில் படத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுவருகிறார்கள்.