எலெக்ட்ரிக் வாகனங்களை நினைச்சாலே பயமாகத்தான் இருக்கிறது. முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பைக்குகள், ஸ்கூட்டர்கள்தான் எரிந்து கொண்டிருந்தன.
எப்போவாச்சும் எலெக்ட்ரிக் கார் எரியுற சம்பவமும் நடக்கும். இப்போது சொகுசு எலெக்ட்ரிக் கார்களும் எரியும் சம்பவங்கள் Count Down ஆகத் தொடங்கிவிட்டன. நேற்று, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு வால்வோ சொகுசு கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது. சத்தீஸ்கர் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இந்த நிகழ்வில் நல்லவேளையாக, பயணிகளும் டிரைவரும் காரில் இருந்து இறங்கித் தப்பித்து விட்டது கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும் – ஹைவேஸில் கார் ஓடிக் கொண்டிருக்கும்போதே தீப்பிடித்ததுதான் கொஞ்சம் பீதியாக இருக்கிறது. காரிலிருந்து இறங்கியதும், அந்தக் காரின் உரிமையாளரே வீடியோ எடுத்து இதை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டது வைரலாகி இருக்கிறது.
உலகளவில் வால்வோ நிறுவனம்தான் பாதுகாப்பான கார்களைத் தயாரிப்பதில் கில்லி என்று பெயரெடுத்த கார் கம்பெனி. முதன் முதலில் வால்வோ நிறுவனம்தான் கார்களின் முக்கியப் பாதுகாப்பு வசதியான சீட் பெல்ட்டைக் கண்டுபிடித்த நிறுவனம்; அதுவும் 3 பாயின்ட் சீட் பெல்ட் ஆப்ஷனுடன் வித்தியாசமான இந்தத் தொழில்நுட்பம் 60–களில் இருந்து இப்போதுவரை பரவலாக வியப்பாகப் பேசப்பட்டது. வால்வோ நிறுவனம்தான் தங்கள் கார்களின் கட்டுமானத்திலும், காற்றுப்பைகளை அள்ளித் தருவதிலும் கஞ்சத்தனம் காட்டாத நிறுவனம். அப்படிப்பட்ட வால்வோவில் இருந்து C40 எனும் எலெக்ட்ரிக் கார் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
வால்வோ நிறுவனம் XC40 Recharge, C40 Recharge என 2 ப்யூர் எலெக்ட்ரிக் கார்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவில் எரிந்து கொண்டிருப்பது C40 என்பதாகத் தெரிகிறது. நீல நிறத்தில் இருக்கும் அந்த அழகான கார், முழுவதுமாக எரிந்து முடிந்து எலும்புக்கூடாகும் வரை எரிந்து முடிப்பது பார்ப்பதற்கே வருத்தமாகத்தான் இருக்கிறது.
LG Pouch NMC cells strike again?
Sadly a case of Volvo C40 Recharge getting caught on fire on NH53 has come up. From video fire is starting from the bottom.
Volvo sells 78kWh pack in India which uses LG Pouch NMC cells.
Hope @volvocarsin @volvocars investigates this soon. pic.twitter.com/FRnL60Cdnw
— Tesla Club India® (@TeslaClubIN) January 28, 2024
இந்தக் காரை எஸ்யூவி கூபே என்பார்கள். XC40 எஸ்யூவி காரின் கூபே வெர்ஷன்தான் இந்த C40. இதை 61.25 லட்சம் எக்ஸ் ஷோரூம் ரூபாய்க்கு லாஞ்ச் செய்த வால்வோ, இதை போன அக்டோபர் மாதம்தான் இதன் எக்ஸ் ஷோரூம் விலையை 63 லட்சத்துக்கு ஏற்றியது. அப்படியென்றால், ஆன்ரோட்டுக்கு வரும்போது சுமார் 67 லட்சத்தைத் தாண்டிவிடலாம்.
தங்கள் ICE (Internal Combustion Engine) கார்களிலேயே அத்தனை பாதுகாப்பு வசதிகளைக் கொட்டிக் கொடுக்கும் வால்வோ, இந்த ப்ரீமியமான எலெக்ட்ரிக் காரில் பாதுகாப்பு வசதிகளைச் சும்மா விடுமா என்ன?
360 டிகிரி கேமரா, தானாக ஆக்ஸிலரேட்டர் அழுத்தி/பிரேக் பிடிக்கும் அடாஸ் தொழில்நுட்பம், வதவதவென காற்றுப்பைகள், ஆல்வீல் டிஸ்க் பிரேக்குகள் என்று ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் உண்டு. இந்த C40–ல் இருப்பது 78kWh சக்தி கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக்.
‘‘இதன் ரேஞ்ச்சைக் கூட்டியிருக்கிறோம். இது சிங்கிள் சார்ஜுக்கு 530 கிமீ தூரம் போகும் அளவுக்கு இதைச் செயல்படுத்துகிறோம். காரணம், இதில் உள்ள அட்வான்ஸ்டு பேட்டரி பேக்!’’ என்று சில மாதங்களுக்கு முன்புதான் வால்வோ நிறுவனம் சொல்லியது. BMS (Battery Management System) என்று சொல்லக்கூடிய தொழில்நுட்பத்தில் வால்வோ எப்போதுமே விழித்த கண்ணை மூடாமல் வேலை பார்க்கும் என்பார்கள்.
இதிலுள்ள NMC (Lithium Nickel Manganese Cobalt Oxide) செல்கள், அட்வான்ஸ்டு LG Pouch கொண்டது என்றார்கள். 408bhp பவரையும், 660Nm டார்க்கையும் கொண்ட இது 0–100 கிமீ–யை வெறும் 4.7 விநாடிகளில் தொடும் அளவுக்கு எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட வால்வோ நிறுவனத்தின் காரே எரிந்து போனதுதான் எலெக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்கள் மத்தியில் கொஞ்சம் பீதியைக் கிளப்புகிறது.
ஓவர் சார்ஜிங்கால் பேட்டரி ஹீட்டாகி விட்டதா… எலெக்ட்ரிக் மோட்டார் பிரச்னையா… அல்லது லித்தியம் அயன் பேட்டரியில் கோளாறா… இல்லேனா நம்ம ஊர் வெயிலுக்கு எலெக்ட்ரிக் காரே ஆகாதா… என்னவென்று தெரியவில்லை. இந்தத் தீ விபத்துக்கான காரணத்தை விரைவில் வால்வோ நிறுவனம் விளக்க வேண்டும்!