அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்வி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் சாந்தனு, இப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாக்யராஜ் கடிதம் எழுதி அனுப்பியுள்ளது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “இதை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் எனக்கு நிறையப் பரிசுகளைக் கொடுத்திருக்கிறது. எல்லோருமே இப்படத்திற்கும், எனக்கும் நல்ல ஆதரவைக் கொடுத்திருக்கிறீர்கள். இந்த வரவேற்பு இதற்குமுன் எனக்குக் கிடைத்ததே இல்லை. இப்படம் மூலம் நிறைய பாடங்களையும் கற்றுக் கொண்டுள்ளேன். மிக முக்கியமாக எந்த மாதிரியான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டுள்ளேன்.
என் அப்பாவும் நானும் அதிகமாகப் பேசிக் கொள்ளமாட்டோம். எப்போதாவதுதான் பேசிக்கொள்வோம். ஒரு 15 ஆண்டுகளாக நாங்கள் சரியாகப் பேசிக்கொள்வதில்லை. நான் நன்றாக வரவேண்டும் என்ற ஏக்கம் என்னைப் போலவே என் அப்பாவிற்கும் இருந்துள்ளது. இப்போது இத்தனை நாட்களுக்குப் பிறகு ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் நான் நடித்ததைப் பார்த்துவிட்டு அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதைப் படித்துவிட்டு மனம் உருகிவிட்டேன்” என்றார்.
சாந்தனுவிற்குப் பாக்கியராஜ் எழுதிய கடிதம் இதுதான், “என் அன்பு மகன் சிங்காவுக்கு உன் அன்பு அப்பா ஆசை முத்தங்களுடன் எழுதும் கடிதம். இதுதான் நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். எனக்கு ஆங்கிலம் எழுத வராது, உனக்குத் தமிழ் படிக்க வராது. இப்ப இல்லை, சின்ன வயதில்.
‘வேட்டிய மடிச்சுக் கட்டு’ உன்ன நடிக்க வச்சப்ப வசனங்களைக் கேட்டுக் கேட்டு மனப்பாடம் பண்ணி நீ நடிச்ச. இப்போ காலங்கள் வேகமாக ஓடி உனக்குக் கல்யாணமும் ஆகிடுச்சு. ‘நீ நல்லா கிரிக்கெட் ஆடுற, அதுல உன்னையவிட்டா நல்ல வருவேனு’ உன்னுடைய பி.டி சார் உங்க அம்மா கிட்ட சொன்னதாக எனக்குத் தகவல் வந்தது. பிள்ளைகளுக்கு நல்ல படிப்பைக் கொடுப்பதுதான் பெற்றோரின் முதல் கடமை, உனக்கு அதைச் சரியாகக் கொடுப்போம். அவர்களாக வளர்ந்து உணர்ந்து அவர்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துக்குவாங்க என்று நானும், உங்க அம்மாவும் நினைச்சோம்.
‘சும்மா இருக்க சங்க ஊதி கெடுத்தக் கதை’யாக நான் படத்தின் வசனம் எழுதிக்கிட்டு இருக்கும்போது உன்ன பாத்து ‘ஏ சிங்கா, என் படத்துல எனக்கு மகனாக நடிக்கிற மாதிரி ஒரு கதாபாத்திரம் இருக்கு நீ நடிக்கிறியா’ என்றேன். ஓகே என்று நீயும் சொல்லிட்ட. வசனத்தை இரண்டு, மூன்று முறை நல்ல கேட்டுட்டு நடந்துகிட்டே அந்த வசனத்த சொன்ன. நான் வியந்துவிட்டேன். நீ நல்லா நடிச்சத பார்த்து, லீவு நாட்களிலேயே அந்தப் படத்தின் படப்பிடிப்பை வைத்து உன்னை நடிக்க வைத்தேன். அது கிரிக்கெட்டிலிருந்து நடிகனாக உன்னை திசை மாற்றியது.
அதற்குப் பிறகு ‘சக்கரகட்டி’ படத்தில் உனக்கு எல்லாம் சரியாக அமைந்தும் வெற்றி சரியாக அமையவில்லை. அடுத்தடுத்து அதுவே தொடர வீட்டில் எல்லோருமே வருத்தமானோம். நானும், அம்மாவும் ‘உன் கிட்ட திறமை இருக்கு, தன்னம்பிக்கையை மட்டும் விட்டுறாத’ என்று சொல்லிக்கிட்டே இருப்போம். அப்பப்போ சோர்ந்துபோனாலும் விடாமல் முயற்சி செய்துகொண்டே இருப்ப நீ. கிரிக்கெட்டும் அப்பப்போ விளையாடிட்டு இருப்ப.
இப்போ உன் திறமைக்கும் நடிப்புக்கும் ஏற்ற மாதிரி ‘ப்ளூ ஸ்டார்’ படம் அமைந்திருக்கிறது. உனக்குச் சரியான களம் அமைத்து உன்னை தூக்கிவிட்ட பா.ரஞ்சித், இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் படக்குழு அனைவருக்கும் எனது நன்றிகள். எந்த உயரத்துக்குப் போனாலும் நன்றியோட இத மனசுல பொறித்து வச்சுக்கோ, பதிச்சு வச்சுக்கோ.
‘கிழக்கே போகும் ரயில்’ படத்துல உதவி இயகுநராக நான் இருந்தப்போ ஹீரோவுக்குக் கவிதை மாதிரி ஒரு வசனம் எழுதியிருந்தேன். ‘எல்லாருக்கும் உயர்வு வரும் தெரிஞ்சுக்கோ, நல்லவருக்கே நிலைத்திருக்கும் புரிஞ்சுக்கோ. கள்ளாருக்கும் செல்வம் வரும் தெரிஞ்சுக்கோ, அதைக் காப்பாத்ததான் புத்தி இருக்கனும் புரிஞ்சுக்கோ” என்று எழுதியிருப்பேன். இதை உன் மனசுல பத்திரமா பூட்டி வச்சுக்கோ. வெற்றிகள் உன்னை தொடரட்டும்” என்று அப்பாவின் கடிதத்தை நெகிழ்ச்சியுடன் வாசித்துக் காட்டினார் சாந்தனு.