பாகிஸ்தானின் பிரதமராக 2018-ம் ஆண்டு முதல் பதவி வகித்த இம்ரான் கான், கடந்த 2022-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியிழந்தார். அதைத் தொடர்ந்து அவர்மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 150 வழக்குகள் தொடரப்பட்டிருக்கிறது. அவருக்குக் கிடைத்த பரிசுப் பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்றதாகச் சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

அதைத் தொடர்ந்து ரகசியக் காப்புறுதியை மீறியதாகத் தொடரப்பட்ட வழக்கில், மேலும், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தற்போது, தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவிக்கு இன்று 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி 10 ஆண்டுகள் பொதுப் பதவியில் இருப்பதற்குத் தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மேலும், 787 மில்லியன் ரூபாய் (பாகிஸ்தான் மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. வரும் 8-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தோ்தல் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரும் இம்ரான் கானின் திட்டத்துக்கு, நீதிமன்றத் தீர்ப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது அரசியல் வாழ்க்கை அஸ்தமனத்தை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.