ஈரோடு: டாஸ்மாக்கில் கலப்பட மது விற்பனையா? – பகிரப்படும் வீடியோ… அதிகாரிகள் சொல்வதென்ன?

தமிழ்நாடு அரசு விற்பனைக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதையொட்டிய பார்களில் இரவு 10 மணி தொடங்கி பிற்பகல் 12 மணி வரை சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாகவும் பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்திய இருவர் உயிரிழந்தனர்.

ஈரோடு டாஸ்மாக் கடை

இந்தச் சம்பவத்தால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவின் தரம் குறித்து பெரும் சந்தேகங்கள் ஏற்பட்டன. இதனால், டாஸ்மாக் கடைகளையொட்டிய பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், அவற்றைக் கண்காணிக்கவும் தமிழக காவல்துறையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த சிலர், ஈரோடு பேருந்து நிலையம் அருகேயுள்ள 3480 எண் கொண்ட டாஸ்மாக் கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விலை உயர்ந்த மது வகையை வாங்கி உள்ளனர். இந்த பாட்டிலின் பெட்டியைத் திறந்தபோது, மூடி சரியாக மூடாமல் திறந்த நிலையில் இருந்துள்ளது. அதை முகர்ந்து பார்த்தபோது, விலை குறைந்த மதுவைப் போன்று வாசனை அடித்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த மதுவை வாங்கியவர்கள், டாஸ்மாக் கடை ஊழியரான குமார் என்பவரிடம் முறையிட்டுள்ளனர். அதற்கு அவர் மதுவை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது. வேண்டுமென்றால், ரூ.100 பிடித்தம் செய்துகொண்டு மீதித் தொகையை தருவதாகத் தெரிவித்துள்ளார். இதனால், வாடிக்கையாளருக்கும், டாஸ்மாக் ஊழியரான குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, பணத்தை வாங்காமல் அந்த மதுவை டாஸ்மாக் ஊழியரிடமே வாடிக்கையாளர் திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் ஊழியர் குமார்

இது தொடர்பாக ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கூறுகையில், “உடைந்த பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது, பாட்டிலுக்கு கூடுதலாகப் பணம் பெறக் கூடாது என ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மது வாங்க வந்த வாடிக்கையாளரிடம் கடை ஊழியர் நடந்து கொண்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். விலை உயர்ந்த மதுவில் கலப்படம் செய்ய வாய்ப்பில்லை. இருப்பினும், அந்தக் கடையில் விற்பனை செய்த விலை உயர்ந்த மற்ற மது வகைகளை ஆய்வு செய்வோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.