ஶ்ரீகாந்த், த்ரிஷா நடிப்பில் வெளியான ‘மனசெல்லாம்’ படத்தை இயக்கியவர் சந்தோஷ் இப்போது கோலாஜ் ஓவியக் கலைஞராகவும் அசத்திவருகிறார். சமீபத்தில் ‘கலைஞர் 100’ விழாவிற்காக ஒரு லட்சம் புகைப்படங்களைக் கொண்டு தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியின் கோலாஜ் போர்ட்ரைட்டை வரைந்திருக்கிறார்.
இதற்கு முன் 65,000 புகைப்படங்களைக் கொண்டு கனிமொழிக்கும், 50,000 புகைப்படங்களைக் கொண்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இப்படி கோலாஜ் உருவாக்கியிருக்கிறார் சந்தோஷ்.
இயக்குநரான நீங்கள்.. திடீரென கோலாஜ் ஓவியம் பக்கம் கவனம் செலுத்துவது ஏன்?
”அடிப்படையில் நான் ஓவியன். அதன்பின்னரே இயக்குநரானேன். என் உலகம் சினிமாதான். அதே சமயம் ஓவியத்தையும் விட்டுவிட மனசில்ல. ஓவியங்களால்தான் இயக்குநராகவும் ஆனேன். என்னோட முழுப்பெயர் சந்தோஷ் ஈஸ்வரமூர்த்தி. ஈரோட்டில் உள்ள பவானியில்தான் பிறந்து வளர்ந்தேன். எட்டாவது வரைதான் படிச்சிருக்கேன். ஆறாவது படிக்கும்போதே, கடை பெயர்ப் பலகைகளுக்கு வரையும் ஓவியராகிட்டேன். தினத்தந்தி, பாக்யராஜ் சாரோட பாக்யா. கமல் சாரோட ‘மய்யம்’னு பத்திரிகைகள்ல ஓவியராக இருந்திருக்கேன். என் ஓவியங்கள் விகடனிலும் வெளியாகியிருக்கு. விகடனின் ‘காதல் படிகட்டுகள்’ல பூமா ஈஸ்வரமூர்த்தியின் கட்டுரைக்குப் படம் வரைஞ்சிருக்கேன். சில கவிதைகளுக்கும் ஓவியங்கள் வரைஞ்சிருக்கேன். ஓவியங்களே என்னை அடுத்தகட்டத்துக்கும் அழைச்சிட்டுப் போனது. திரைப்படங்களுக்கு டைட்டில் கார்டு எழுதும் வாய்ப்பு வந்தது. ‘பவானி சந்தோஷ்’ங்கற பெயர்ல சூப்பர் குட், கே.எஸ்.ரவிக்குமார் காம்பினேஷனின் படங்கள் உட்பட 60 படங்களுக்கு மேல தலைப்பு எழுதியிருக்கேன்.
அதன்பின், பார்த்திபன் சாரோட ‘சரிகமபத நீ’ல உதவி இயக்குநரானேன். அவரோட ‘பாரதி கண்ணம்மா’, சசி சார், எழில் சாரோட ‘சொல்லாமலே’, ‘பெண்ணின் மனதைத் தொட்டு’னு படங்கள்ல இணை இயக்குநரானேன். இந்த அனுபவத்தோடு ‘மனசெல்லாம்’ படத்தை இயக்கினேன். இளையராஜா சார் இசையமைச்சிருந்தார். அவரோட குட்புக்ல நானும் இருக்கேன். என்னோட அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட்டை சமீபத்தில் அவர்கிட்ட எடுத்துட்டுப் போனேன். ‘இறையருள் நிறைக!’ன்னு சொல்லி கையெழுத்துப் போட்டு ஆசீர்வதிச்சார். ‘மனசெல்லாம்’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய இடைவெளியாச்சு. சினிமாவை விட்டு எங்கேயும் போயிடல. விளம்பர படங்கள் பக்கம் கவனம் செலுத்தினேன். இப்ப மறுபடியும் படம் இயக்குறேன்”.
வேறு யாருடைய புகைப்படங்களையெல்லாம் இதுபோலச் செய்திருக்கிறீர்கள்?
”இந்தப் பெருமை லிங்குசாமி சாருக்குத்தான் சேரும். ஏன்னா அவரோட நட்பு வட்ட இயக்குநர்கள் பட்டியலில் எனக்கும் தனி இடம் உண்டு. ஒருமுறை லிங்குசாரோட யோகா குருவை, இப்படி ஒரு கோலாஜ் ஓவியமாகச் செய்து கொடுத்தேன். லிங்கு சாருக்கு ரொம்பவே ஆச்சரியம். நம்ம நட்புவட்டத்துல இப்படி ஒருத்தரா என ரசித்தவர், அவரோட கவிக்கோ விழாவிற்கு இப்படி ஒரு நினைவுப் பரிசு கொடுக்க விரும்பினார். ‘அந்த விழாவிற்கு வருகை தரும் ‘கனிமொழி மேடத்துக்கும் ஒரு நினைவுப் பரிசு கொடுக்கணும். இதே மாதிரி கோலாஜ் படமாகவே செய்து கொடுங்கள்’னு கேட்டார்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் 65,000 புகைப்படங்களைக் கொண்டு கனிமொழி மேடத்தின் கோலாஜை ரெடி பண்ணினேன். விழாவில் அந்த ஓவியத்தைப் பார்த்த மேடம் பிரமிச்சிட்டாங்க. இப்படி ஒரு கோலாஜ் ஓவியத்தை, `ரொம்பவே ஆச்சர்யம். இப்படி ஒரு பரிசை எதிர்பார்க்கல’ன்னு சொன்னதோடு, அதை இப்ப அவங்களோட அலுவலகத்தில் இப்ப பத்திரமாகவும் பாதுகாக்குறாங்க.
அதைப் போல ரஹ்மானின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை இருந்தவர் அவர் அம்மா கரீமா பேகம். அதனால அவரோட அம்மாவின் 50,000 புகைப்படங்களைக் கொண்டு, ரஹ்மானின் முகத்தை கோலாஜ் பண்ணிக் கொடுத்தேன். சமீபத்தில்தான் அவரைச் சந்தித்து, ஓவியதைக் கொடுத்தேன். ஆச்சரியத்தில் நெகிழ்ந்துட்டார் மனிதர். இளையராஜா சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார் ரெண்டு பேரின் நட்பு வட்டத்திலும் நான் இருக்கறதை பெருமையா நினைக்கறேன். இதைவிட பிரமாண்டமான கோலாஜ் என்றால் அது கலைஞரின் கோலாஜ் தான்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் கோலஜை பிரமாண்டமா செய்து கொடுக்கச் சொல்லி இயக்குநர்கள் சங்கத்தில் கேட்டாங்க. இதற்கு வித்திட்டவர் லிங்குசாமி சார்தான். கலைஞரின் மனதில் இடம்பெற்ற அண்ணா, பெரியார் ஆகியோரின் ஒரு லட்சம் புகைப்படங்கள வச்சு, கலைஞர் கோலாஜை செய்து முடித்தேன். ‘கலைஞர் 100’ விழாவில் கொடுக்க நினைத்தோம். ஆனால், ஓவியங்களை சமீபத்தில்தான் ரெடி பண்ணினேன். இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், லிங்குசாமி, பேரரசு ஆகியோரது மேற்பார்வையால், இந்த போர்ட்ரைட் ரெடியாகியுள்ளது. கலைஞரின் இதயத்தில் இடம்பெற்ற பெரியார், அண்ணா ஆகியோரது புகைப்படங்களை மட்டும் வைத்து, அதாவது கிட்டத்தட்ட ஒரு லட்சம் புகைப்படங்களைக் கையினால் நுணுக்கமாக வெட்டி ஒட்டிக்கொண்டு, கலைஞரின் முகத்தைச் செய்திருக்கிறேன். இந்த ஓவியத்திற்கு இரண்டு வார கால அவகாசம் தேவைப்பட்டது.”
இந்த ஓவியங்களின் சிறப்புகள் என்ன?
”பொதுவா கோலாஜ் ஓவியம்னா, புருவம்னா புருவம் மாதிரி வெட்டி ஒட்டுவாங்க. கண்களையும், கண் மாதிரி வெட்டி ஒட்டுவாங்க. ஆனா, என்னோட கோலாஜ் அப்படியில்ல. எல்லாமே புகைப்படங்களால் இருக்கும். நாம பண்ணுறது போட்ரைட் ஆக இருந்தாலும், அது உயிரோட்டமானதா இருக்கணும்னு விரும்பினேன். யாரோட முகத்தை கோலாஜ் ஆகப் பண்ணுறமோ, அந்த முகத்தில் அவங்க புகைப்படங்களே இடம்பெறுவதற்கு பதில் அவங்க நேசிக்கக் கூடியவங்களை வைத்துச் செய்தால் என்னன்னு தோணுச்சு. இந்த ஓவியங்களை முழுக்க முழுக்க கைகளால் மட்டுமே உருவாக்குறேன். கத்தி, கத்தரிக்கோல் எதுவும் பயன்படுத்தாமல், கையினாலேயே கிழித்து ஒட்டுவேன். ஆரம்பத்தில் பென்சில் ஸ்கெட்ச் ஆக ரெடியாகும் ஓவியம் வரையும்போதே, எங்கே என்னென்ன இடத்தில் ஷேட் வரும் என மனதிற்குள் முழுமையாக ரெடியாகும். ஒருமுறை வேலையை ஆரம்பிச்சா, அது முடிக்கற வரை வேற சிந்தனையே வராது. கவனம் முழுவதும் இதில்தான் இருக்கும். ஒவ்வொரு ஓவியத்துக்கும் பத்து நாள்கள் செலவானது. பத்து நாள் என்பது ரொம்பவே குறைவு. ராத்திரியும் பகலுமா வேலை செய்தேன்.”
இனிமே கோலாஜில்தான் கவனம் செலுத்துவீர்களா?
”இல்லவே இல்லை. அடுத்த பட வேலைகள்ல இறங்கிட்டேன். முரளி சார் நடித்த ‘பூமணி’, பார்த்திபன் சார் நடித்த ‘காக்கைச் சிறகினிலே’ எனப் பல படங்களைத் தயாரித்த விவேகானந்தன் சார் தயாரிப்பில் ஒரு படம் இயக்குறேன். இந்தப் படத்திற்குக் கவிதாபாரதி வசனம் எழுதுறார். சின்னத்திரைத் தொடர்களை இயக்கிவர், இப்போது நடிகராகவும் பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இந்தப் படத்திற்கான லொக்கேஷன் வேலைகளிலும் இறங்கிட்டோம். தயாரிப்பாளர் விவேகானந்தன் சார் ‘நீங்க விரும்புற படத்தைப் பண்ணுங்க சந்தோஷ்’னு எனக்கு ஒரு பெரிய சுதந்திரத்தைக் கொடுத்திருக்கார். அந்தப் பொறுப்புகளோடு அடுத்த படத்தை ஆரம்பிச்சிட்டேன். படத்திற்கு ‘சன்’ (son) என்று டைட்டில் வச்சிருக்கோம். ஹீரோவும் ரெடி. மற்ற நடிகர்கள் தேர்வும் ஒரு பக்கம் நடந்துட்டிருக்குது.”
கோலாஜில் அடுத்து யாரை எதிர்பார்க்கலாம்..?
”என்னோட சின்ன வயசில அப்ப பிரதமராக இருந்த ராஜீவ்காந்திக்கு அனுப்பி வச்சேன். அவர் அதைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருக்கார். அந்தக் கடிதத்தை இன்னமும் பத்திரமாக வச்சிருக்கேன். அதற்கு நன்றிக்கடனாக ராகுல்காந்தி- பிரியங்கா இருவரின் கோலாஜ் ஓவியங்களை வரைந்து கொடுக்கணும்னு விரும்புறேன். சமீபத்தில் இதைப் பத்தி கனிமொழி மேடத்துக்கிட்ட சொன்ன போது, ‘ஓவியம் ரெடியானதும் சொல்லுங்க, ராகுல்கிட்ட கொண்டு சேர்க்கற பொறுப்பு என்னோடது’ன்னு சொல்லி என்னை நெகிழவச்சிட்டாங்க. தவிர, லண்டன் கேலரிக்காக ஐந்து லட்சம் புகைப்படங்களால் ஆன, முள்முடிசூட்டிய இயேசுவின் முகத்தை கோலாஜ் பண்ணச் சொல்லிக் கேட்டிருக்காங்க. சரின்னு சொல்லிட்டேன். இதையும் செய்து முடிக்கணும்னு விரும்புறேன்.”