மும்பை,
நவிமும்பை கலம்பொலி பகுதியில் 59 வயது தொழில் அதிபர் வசித்து வருகிறார். இவரை கடந்த மாதம் சிலர் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள் கிரிப்டோகரன்சி, அந்நிய செலாவணியில் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினர். இதைநம்பி தொழில் அதிபர் போனில் பேசியவர்கள் அனுப்பிய லிங்க் மூலமாக ரூ.64 லட்சத்து 70 ஆயிரத்து 24-ஐ முதலீடு செய்தார்.
இந்தநிலையில் தொழில் அதிபர் முதலீடு மூலம் கிடைத்த லாபத்தை திருப்பி கேட்ட போது போனில் பேசியவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை.
தொழில் அதிபர் மீண்டும், மீண்டும் கேட்டதை அடுத்து அவர்கள் ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்து 878-ஐ திருப்பி கொடுத்தனர். அதன்பிறகு போனில் பேசியவரை தொழில் அதிபரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் அவர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்த பணத்தையும் திரும்ப பெறமுடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழில் அதிபர் ரூ.60 லட்சம் மோசடி குறித்து நவிமும்பை போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் 5 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.