திருவனந்தபுரம்: கேரள பாஜக நிர்வாகி ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித் சீனிவாசன். கேரள பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுதலைவராக பதவி வகித்து வந்த அவர், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர்19-ம் தேதி காலையில் நடைபயிற்சிக்காக வீட்டில் இருந்து புறப்பட தயாரானார். அப்போது, பைக்குகளில் வந்த மர்ம நபர்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ரஞ்சித் சீனிவாசனை சரமாரியாக தாக்கினர். இதில், அவரது உடலில் 56 இடங்களில் வெட்டு விழுந்தது. அவரது முகம் முழுமையாக சிதைக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே ரஞ்சித் சீனிவாசன் உயிரிழந்தார். தாய், மனைவி, மகளின் கண்எதிரேகொடூரமாக அவர் படுகொலை செய்யப்பட்டது, கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ கட்சியினர்: இதுதொடர்பாக பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ), எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நைஸாம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லம், சலாம், அப்துல் கலாம், சபருதீன், மன்ஷத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நாசர், ஜாகிர் உசேன், ஷாஜி, ஷெர்னாஸ் ஆகிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவேலிக்கரா கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. மொத்தம் 156 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 1,000 பக்க ஆவணங்கள், 100 ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதேவி கடந்த 20-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில் 15 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது.
அவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி ஸ்ரீதேவி நேற்று அறிவித்தார். இதன்படி, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
பழிக்குப்பழி கொலைகள்: கடந்த 2021 பிப்ரவரியில் ஆலப்புழாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் நந்து கிருஷ்ணாவை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இதற்கு பழிவாங்கும் விதமாக, 2021 டிசம்பர் 18-ம் தேதி எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தகே.எஸ்.ஷான், மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில், ஆர்எஸ்எஸ் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஷான் கொலைக்கு பழிவாங்குவதற்காக, அடுத்த நாள் (டிசம்பர் 19)காலையில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 15 பேர், பாஜக நிர்வாகி ரஞ்சித் சீனிவாசனை கொலை செய்தனர்.
இந்த வழக்கில் கைதான 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில், நவாஸ் என்பவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 14 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இது அரிதான வழக்கு என்பதால், அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்குமாறு அரசு வழக்கறிஞர் கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘‘குற்றவாளிகள் கருணை காட்ட தகுதியானவர்கள் கிடையாது’’ என்று கூறி, 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் அதிகபட்சமாக 38 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவில் இதுவே அதிகம் பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு ஆகும். தற்போது, ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிகம் பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவேமுதல்முறை. இந்த வழக்கு காரணமாக மாவேலிக்கரா நீதிமன்றத்தில்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது என்று கேரள போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு தரப்பு வழக்கறிஞர் பிரதாப் கூறும்போது, ‘‘வழக்கு விசாரணை மிகவும் நேர்மையாக நடந்தது. ஒரு குற்றவாளியின் செல்போன் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில்,படுகொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியல் இருந்தது. அதில் ரஞ்சித் சீனிவாசன் பெயர் முதல் இடத்தில் இருந்தது. இது வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்தது’’ என்றார்.
கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகேப் கூறும்போது, ‘‘தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாரை பாராட்டுகிறேன். அவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும்’’ என்றார்.