புதுடெல்லி: ‘ஹேமந்த் சோரன் எங்கே…’ – அமலாக்கத் துறை மட்டுமல்ல, கிட்டத்தட்ட 48 மணி நேரங்களாக தேசிய ஊடகங்களில் தலைப்புச் செய்தி இதுவே. அத்துடன் வலைதளங்களில் மீம்ஸ்களாகவும் இந்த வாசகங்கள் வலம்வர, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஒரேநாளில் ட்ரெண்டிங்கின் உச்சத்தை அடைந்தார்.
சம்பவம் இதுதான். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். ஹேமந்த்திடம் விசாரிப்பதற்காக 8 முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத் துறை. எந்த சம்மனுக்கும் ஆஜராகவில்லை. இறுதியாக ஜனவரி 20 அன்று ஜார்க்கண்டில் உள்ள முதல்வரின் இல்லத்துக்கே வந்து விசாரித்து சென்றனர் அமலாக்க அதிகாரிகள். எனினும், விசாரணை முழுமையடையததால் மீண்டும் ஆஜராக வேண்டும் என ஹேமந்துக்கு 9-வது முறையாக சம்மன் அனுப்பினர். அதற்காக இரண்டு தேதிகள் அவரை தேர்ந்தெடுக்க சொல்லப்பட்டது. அதன்படி, ஜனவரி 29-ஐ தேர்ந்தெடுத்த ஹேமந்த், அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராவதாக அமலாக்கத் துறைக்கு பதில் அனுப்பியதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், இவற்றுக்கு மாற்றாக ஜனவரி 27 பிற்பகலில் தனி விமானத்தில் டெல்லி சென்றார் என்று தகவல் வெளியானது. தன் மீதான வழக்கின் சட்ட ஆலோசனைகளை பெறுவதற்காக ஹேமந்த் டெல்லி சென்றிருந்தார் என்று சொல்லப்பட்டது. டெல்லியில் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து ஹேமந்த்தை தேடி ஜனவரி 29 திங்கள்கிழமை காலை புது டெல்லியில் உள்ள அவரின் சாந்தி நிகேதன் இல்லத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் விரைந்தனர். ஆனால், முதல்வர் ஹேமந்த் அங்கு இல்லை.
அதேபோல் டெல்லி வசந்த் விஹாரில் உள்ள அவரது அரசாங்க அலுவலகத்திலும் இல்லை. இப்படியாக அவரின் அதிகாரபூர்வ இடங்களில் சோதனையிட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் அவர் அந்த இடங்களில் இல்லை என்பது உறுதி செய்ததை அடுத்தது, அவரை காணவில்லை எனக் கூறி அவர் வெளியிடங்களுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, அவர் வந்த தனி விமானத்தை சிறைபிடித்தது.
இதற்கிடையே, கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஹேமந்த் சோரன் எங்கிருக்கிறார் என்கிற தகவல் எதுவும் வெளியாகவில்லை. அவருடைய அரசாங்கத்தின் மூத்த ஊழியர்களின் தொலைபேசிகளும் அணைக்கப்பட்டன. ஹேமந்த் சோரன் டெல்லியிலோ அல்லது ராஞ்சியிலோ இல்லாததால் 30 மணி நேரத்துக்கும் மேலாக அவரைக் காணவில்லை என்று ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.
ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான பாபுலால் மராண்டி ‘காணவில்லை’ போஸ்டர் ஒன்றை அடித்து ஹேமந்த் சோரனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.11,000 ரொக்கப் பரிசு அறிவித்தார். அதேநேரம் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, “ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் தலைமறைவாகிவிட்டார். அவரது மனைவி அடுத்த முதல்வராக பதவியேற்க வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது” என்றுக் கூறி மாநிலத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் கூறியதற்கு ஏற்ப மறுப்பக்கம் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கூடவே, தலைநகர் ராஞ்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மறுநாள் செவ்வாய்கிழமை (ஜன.30) காலை யாரும் எதிர்பாராத வகையில் ராஞ்சியை அடைந்து இரண்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் ஹேமந்த் சோரன்.
ஒன்று, மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு. இரண்டு, கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம். இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கடந்த 24 மணி நேரத்தில் எங்கே இருந்தீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு, “நான் உங்கள் இதயங்களில் வசிக்கிறேன்” என்று கூறி புன்னகைத்தார்.
டெல்லி – ராஞ்சி… – அமலாக்கத் துறை ஹேமந்த் சோரனின் டெல்லி வீடு, அலுவலகத்தை சூழ்ந்து சோதனை நடத்திய நிலையில், ரூ.36 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றியதுடன் ரூ.1.3 கோடி விலையுள்ள BMW X7 என்ற சொகுசு SUV காரையும் முடக்கியது. இதனால், டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு ஹேமந்த் எப்படிச் சென்றார் என்பது பெரிய கேள்வியாக எழுந்தது.
டெல்லியில் இருந்து ராஞ்சி செல்ல சுமார் 1,300 கி.மீ கடக்க வேண்டும். ஏற்கெனவே டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் ஹேமந்தை தடுக்கும் வகையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர் டெல்லி வந்த தனி விமானத்தையும் சிறைபிடித்திருந்தது.
அமலாக்கத் துறையின் கடுமையான கண்காணிப்புக்கு மத்தியில் ஹேமந்த் சோரன் தனியார் கார் ஒன்றில் ராஞ்சி அடைந்தார் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 1,300 கி.மீ. தூரத்தை 21 மணி நேரத்தில் அவர் தனியார் கார் மூலமாக கடந்தார் என்று பாஜக தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஹேமந்த் சோரன் டெல்லியை கடக்க, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியதாகவும் பாஜக தரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது.
பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, “அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியுடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் டெல்லியில் இருந்து சாலை மார்க்கமாக தப்பினார். ஹேமந்த் சோரன் டெல்லியில் இருந்து வாரணாசியை அடைய அரவிந்த் கெஜ்ரிவால் உதவினார். வாரணாசியில் இருந்து ராஞ்சியை அடைய ஹேமந்த்துக்கு ஜார்கண்ட் அமைச்சர் மிதிலேஷ் குமார் உதவினார்” என்று குற்றம் சுமத்தியுள்ளார். இது மாநிலத்தில் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு கேஜ்ரிவாலோ அல்லது மிதிலேஷ் குமாரோ பதில் அளிக்கவில்லை.