தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மழை வெள்ளத்தால் சாலை துண்டிக்கப்பட்டதால் கடற்கரை மீனவ கிராமமான கோவளம் மீனவர் காலனி தனித் தீவு போல் மாறி விட்டது. போயா படகு மூலமே மக்கள் வெளியே வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர், சாலை வசதி இல்லாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். குழந்தைகள் 40 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் முடங்கியுள்ளனர்.
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கடற்கரை கிராமம் கோவளம் மீனவர் காலனி. 45 குடிசை வீடுகளை கொண்ட இந்த கிராமத்தில் 60 குடும்பங்களை சேர்ந்த சுமார் 300 பேர் வசிக்கின்றனர். மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள இந்த கிராமத்தை கடந்த மாதம் 17, 18 தேதிகளில் பெய்த அதி கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு உருக்குலைத்துவிட்டது.
இந்த கிராமத்துக்கு செல்லும் சிறிய சாலை, குடிநீர் குழாய், மின் கம்பங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் வெளி உலகில் இருந்து இந்த கிராமம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மக்கள் வெளியே வர முடியாத நிலை உருவானது. குடிநீர், மின்சாரம் தடைபட்டது. வலைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இக்கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிராம மக்கள் சிறிய போயா படகுகள் மூலம் தான் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். கடற்கரை மணல் பகுதியில் ஊற்று தோண்டி அதில் வரும் தண்ணீரை தான் குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.
மழை வெள்ளம் ஏற்பட்டு 40 நாட்ளுக்கு மேலாகியும் அதிகாரிகள் யாரும் இங்கு வந்து பார்க்கவில்லை என இக்கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து கோவளம் மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் உ.உமயராஜ், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
மழை வெள்ளத்தால் அனைத்தையும் இழந்துள்ளோம். சாலை, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. போயா படகு மூலம் தான் வெளியே சென்று வருகிறோம். கடற்கரை பகுதியில் ஊற்று தோண்டி அதில் வரும் தண்ணீரை தான் குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்துகிறோம். அந்த தண்ணீர் உவர்ப்பாக இருந்தாலும் எங்களுக்கு வேறு வழியில்லை.
வெள்ளத்தில் சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு முன்பு தான் மின்சாரம் வந்தது. சாலை மற்றும் குடிநீர் குழாய் இன்னும் சரி செய்யப்படவில்லை. மீன்பிடித் தொழிலை விட்டால் எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. மீன்பிடி வலைகள் பெருமளவில் சேதமடைந்துவிட்டன.
வீடுகளில் வைத்திருந்த பழைய வலைகளை பயன்படுத்தி தற்போது தொழிலுக்கு சென்று வருகிறோம். சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் எங்கள் கிராமத்தில் இருந்து துறைமுகப் பள்ளியில் படிக்கும் சுமார் 30 குழந்தைகள் கடந்த 40 நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. அனைத்து வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கிறோம். அரசு தான் எங்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்றார்.
இந்த கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டு, கிராமத்தின் பரிதாப நிலையை வெளி உலகுக்கு கொண்டு வந்த எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் கவுரவ செயலாளர் ஆ.சங்கர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
மழை வெள்ளம் கோவளம் கிராமத்தை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. சாலை, குடிநீர் வசதி இல்லாமல் போயா படகு மூலம் வெளியே வரும் பரிதாப நிலையில் இக்கிராம மக்கள் உள்ளனர். பள்ளிக் குழந்தைகளின் கல்வி உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. தமிழக அரசு வழங்கிய வெள்ள நிவாரணத் தொகை ரூ.6,000-ஐ போயா படகு மூலம் வெளியே வந்து நியாயவிலைக் கடையில் வாங்கியுள்ளனர்.
இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மீனவர்கள் செசைட்டியில் பதிவு செய்துள்ளனர். ஆனால், எந்தவித நிவாரண உதவிகளும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவோ, மனு கொடுக்கவோ தெரியாத படிப்பறிவில்லாத அப்பாவிகளாக இங்குள்ள மக்கள் இருக்கிறார்கள்.
எங்கள் அமைப்பு மூலம் 4,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அவர்களுக்கு வழங்கினோம். அந்த குடிநீரையும் அவர்கள் போயா படகுகள் மூலம் தான் கரைக்கு வந்து குடங்களில் பிடித்து சென்றனர்.
எனவே, கோவளம் மீனவர் காலனிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மீன்பிடித் தொழிலுக்கான உபகரணங்கள், பள்ளி குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் ஆகியவை உடனடியாக தேவை. இதனை அரசாங்கம் உடனே செய்து கொடுக்க வேண்டும். இந்த கிராமத்தின் நிலை குறித்து அமைச்சர் கீதாஜீவன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். எனவே, விரைவில் கோவளம் கிராம மக்கள் பாதிப்பில் இருந்து மீள்வார்கள் என நம்புகிறோம் என்றார் அவர்.