சண்டிகர்,
தேசிய ஓபன் நடைபந்தயம் சண்டிகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர பந்தயத்தில் பஞ்சாப் வீரர் அக்சதீப் சிங்1 மணி 19 நிமிடம் 38 வினாடியில் இலக்கை கடந்து புதிய தேசிய சாதனையுடன் முதலிடத்தை தனதாக்கினார். அக்சதீப் சிங் கடந்த ஆண்டு நடந்த நடைபந்தய போட்டியில் 1 மணி 19 நிமிடம் 55 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்ததுடன் பாரீஸ் ஒலிம்பில் போட்டிக்கும் தகுதி பெற்று இருந்தார். அவர் தனது சொந்த சாதனையை நேற்று தகர்த்தார்.
உத்தரகாண்ட் வீரர் சுரஜ் பன்வார் 1 மணி 19 நிமிடம் 43 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து 2-வது இடம் பிடித்ததுடன் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி கண்டார். தமிழக வீரர் செர்வின் (1 மணி 20 நிமிடம் 29 வினாடி) 3-வது இடம் பெற்றார். இந்த பந்தயத்தில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்காக 1 மணி 20 நிமிடம் 10 வினாடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் 20 கிலோ மீட்டர் நடைபந்தயத்துக்கு தகுதி பெற்ற 4-வது இந்திய வீரர் சுரஜ் பன்வார் ஆவார். ஏற்கனவே இந்தியாவின் பரம்ஜீத் பிஷ்த், விகாஸ் சிங் ஆகியோர் கடந்த ஆண்டு ஜப்பானில் நடந்த ஆசிய நடைபந்தய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.