நாட்டின் 76வது தேசிய சுதந்திர தின விழாவை கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் தயார்

நாட்டின் 76வது தேசிய சுதந்திர தின விழாவை பெருமையுடன் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் 76ஆவது தேசிய சுதந்திர தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு சுதந்திர தின வைபவத்தின்; பிரதம அதிதியாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேதா தெவிசின் கலந்து கொள்ள உள்ளார். இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் மதம் மற்றும் கலாசார ரீதியில் சுமார் 700 வருடங்களாக பிரிக்கப்படாத நட்புறவு காணப்படுவதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் இந்தக் குழு இலங்கைக்கு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையொன்று இதன்போது கைச்சாத்திடப்பட உள்ளதாகவும், நாடு அபிவிருத்தியடைந்து வரும் இவ்வேளையில் புதிய உறவுகளை புதுப்பிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்;.

நாடு பல சவால்களை எதிர்கொண்ட போதிலும் கடந்த வருடம் சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டதை நினைவு கூர்ந்த இராஜாங்க அமைச்சர், இலங்கையின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் வாய்ப்பாக இவ்வருட சுதந்திர தின விழாவை பார்க்க முடியும் என்றும் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.