கராச்சி,
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலர் நேற்று (செவ்வாய் கிழமை) பேரணி ஒன்றை நடத்தினர். அக்கட்சியின் கொடியை ஏந்தியபடி, பைக்குகளில் அவர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், திடீரென குண்டுவெடிப்பு நடந்தது.
இந்த சம்பவத்தில், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் 3 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இதனை அக்கட்சிக்கான மாகாண பொது செயலாளர் சலார் கான் காக்கர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்திற்கு நாங்கள் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறோம். கட்சி தொண்டர்களுக்கு பதிலாக பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என அவர் கூறியுள்ளார்.
எனினும், காயமடைந்த நபர்களில் சிலரின் நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது. அதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சில மணிநேரங்களில் இந்த பேரணி நடைபெற்றது.
குண்டுவெடிப்பு சம்பவம் பற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது. ஒரு பலத்த சத்தம் கேட்டதும் கட்சியினர் அலறும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. அந்நாட்டில் பிப்ரவரி 8-ந்தேதி பொது தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.