புதுடெல்லி,
டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜியில் நடந்தது. இதில் பங்கேற்ற இந்தியர்களில் ஒருவரான 18 வயது வீராங்கனை திவ்யா தேஷ்முக் 4.5 புள்ளிகளுடன் 12-வது இடத்தை பெற்றார். மராட்டியத்தை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றார். இந்த நிலையில் நெதர்லாந்து செஸ் போட்டியில் பார்வையாளர்கள் அவரது விளையாட்டை ரசிக்காமல், பாலின பாகுபாட்டை காட்டும் வகையிலான கமெண்ட்டுகளை கூறி தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
செஸ் போட்டியில் வீராங்கனைகள் எப்படி பார்வையாளர்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பதை சொல்ல விரும்புகிறேன். நெதர்லாந்து செஸ் போட்டியில் அதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். இந்த தொடரில் சில ஆட்டங்களில் நான் சில முக்கிய நகர்வுகளை செய்ததும், ஆட்டம் நன்றாக சென்று கொண்டிருப்பதாக நினைத்தேன். அதை நினைத்து பெருமையும் பட்டேன். ஆனால் பார்வையாளர்கள் அதை பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. மாறாக எனது உடை, முடி, எனது உச்சரிப்பு உள்ளிட்ட போட்டிக்கு தேவையில்லாத மற்ற விஷயங்களையே கவனித்தனர். இதனால் நான் மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன். செஸ் போட்டியின் போது, பெண்கள் எப்படி விளையாடுகிறார்கள், அவர்களின் பலம் என்ன? என்பதை பெரும்பாலும் யாரும் கவனிப்பதில்லை என்பதே சோகமான உண்மை.
மேலும் எனது நேர்காணல்களின் போது, பார்வையாளர்கள் போட்டியை தவிர மற்ற அனைத்து விஷயங்கள் குறித்து விவாதிப்பதை பார்த்து ஏமாற்றமடைந்தேன். மிகச்சிலரே எனது ஆட்டம் குறித்து கேட்டனர். அதே சமயம் நேர்காணலுக்கு வீரர்கள் சென்றால், அவர்களின் தனிப்பட்ட விஷயம் குறித்து கேள்வி என்பது மிக குறைந்த அளவிலேயே இருக்கும். பொதுவாகவே வீராங்கனைகள் குறைவாக மதிக்கப்படுகிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். பெண்களுக்கு சரிசமமான மரியாதை கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.