மதுரை: “மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியிலுள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், விதிமீறல் கட்டிடங்கள், நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற கிளையில் 2011-ல் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள கட்டிடங்களின் உயரத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்துறை கடந்த 30.1.1997-ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 9 மீட்டருக்கு மேல் கட்டிடங்களின் கட்டிடங்கள் கட்டக்கூடாது. ஆனால் இந்த விதியை மீறி 9 மீட்டருக்கு மேல் ஏராளமான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த விதி மீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் குறித்து வழக்கறிஞர்கள் ஆணையர்கள் ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி வழக்கறிஞர்கள் ஆணையர்கள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் உயரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார்.
பின்னர் நீதிபதிகள், “இந்த மனு 2011-ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் ஆணையர்கள் விதிமீறல் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி 1000-க்கும் மேற்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை விதிமீறல் கட்டிடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உயர் நீதிமன்றம் எத்தனை முறை உத்தரவிட்டும் மாநகராட்சி நிர்வாகமோ, மாநகராட்சி ஆணையர்களோ விதி மீறல் கட்டிடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கறிஞர்கள் ஆணையர்கள் அறிக்கை அடிப்படையில் 13 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? இத்தனை ஆண்டுகளாகியும் விதிமீறல் கட்டிடம் கட்டிய ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லையா? அப்படியென்றால் விதிமீறல் கட்டிடங்களை மாநகராட்சி ஊக்குவிக்கிறதா? இதை யார் தான் கட்டுப்படுத்துவது?
விதிமீறல் கட்டிட பிரச்சினையை கடுமையான பாதிப்பாக கருத வேண்டும். விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசுக்கு குழப்பம் இருப்பதாக தெரிகிறது. 1997-ல் அரசு பிறப்பித்த அரசாணையை கடைபிடிக்க அரசு நிர்வாகத்துக்கு என்ன சிக்கல் உள்ளது. அரசின் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களின் மீது ஒருபோதும் கருணை காட்டக் கூடாது.
எனவே, மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டிடங்களில் எத்தனை கட்டிடங்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது? மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி கட்டிடப்பட்டுள்ள விதிமீறல் கட்டிடங்கள், அந்த கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை மதுரை மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை பிப்.7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.