புதுடெல்லி: முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை பிப்.6-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
கடந்த 2001-06 அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.
தாமாக முன்வந்து விசாரணை: இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தனக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் மீண்டும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பதை எதிர்த்து பா.வளர்மதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு: இந்த வழக்கு நீதிபதி அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், இந்த வழக்கில் வேறு சில முன்னேற்றம் உள்ளது. இதேபோன்ற மற்றொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் வரும் பிப்.5-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வழக்கையும் தள்ளி வைக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது வளர்மதி தரப்பில், கீழமை நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட இந்த வழக்கை பல ஆண்டுகள் கழித்து மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பதே தவறானது. மேலும் வரும் பிப்.5 முதல் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவுள்ளது. எனவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கூடாது என அறிவுறுத்தி, வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
பதில் மனு அளிக்க வேண்டும்: அதையேற்க மறுத்த நீதிபதிகள்,இதே கோரிக்கையுடன் தமிழக அமைச்சர் ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த வழக்கும் வேறு அமர்வில் வரும் பிப்.5 அன்று விசாரணைக்கு வரவுள்ளது. அந்த வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவைப் பொருத்து இந்த வழக்கு வரும் பிப்.6 அன்று விசாரிக்கப்படும். இடைப்பட்ட காலத்தில் இருதரப்பும் பதில் மனுவும், விளக்க மனுக்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.