எப்படி எல்லாம் சைடு வருமானம் சம்பாதிக்கலாம் என பலரும் தேடிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், மொபைலில் விளம்பரம் பார்த்தாலே பணம் கொட்டும் என கோவையில் கடையை போட்டது ‘My V3 Ads’ என்ற மொபைல் ஆப் நிறுவனம். ஏற்கெனவே இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை பற்றி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், தற்போது My V3 Ads நிறுவனம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காவல்துறையும் இவ்விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது.
My V3 Ads நிறுவனம் பற்றி பா.ம.கவை சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்கு My V3 Ads நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், தங்களது பலத்தை காட்டும் வகையில், நீலாம்பூர் அருகே புறவழிச்சாலையில் My V3 Ads நிறுவனத்துக்கு ஆதரவாக அதில் முதலீடு செய்த 10,000-க்கும் மேற்பட்டோர் பெரும் கூட்டமாக திரண்டனர். எனினும், My V3 Ads குறித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கிவிட்டனர்.
My V3 Ads நிறுவனம் ஏற்கெனவே கோவையில் தொடங்கப்பட்டு மக்களிடம் கோடிக் கணக்கில் பணத்தை வசூலித்துவிட்டது. அதன் உண்மைத் தன்மை என்னவென்று நாணயம் விகடன் கண்டறிந்து சொல்லமுடியுமா? என்கிற வேண்டுகோள் வரவே, சில மாதங்களுக்கு முன்பே விசாரிக்க ஆரம்பித்தோம்.
‘MyV3Ads’ நிறுவனத்தின் திட்டம்…
‘MyV3Ads’ என்கிற நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக புராடக்ட் லாஞ்ச், கிரவ்ன் உறுப்பினர்கள் மீட் என கோவையில் அடிக்கடி கூட்டத்தை நடத்துவது தொடர்கதையாக இருந்தது. ரூ.100 நுழைவுக்கட்டணமாக நிர்ணயித்து, மிகப் பெரிய கொடிசியா வளாகத்தில் நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, ‘குஜராத்தி சமாஜ்’ மாதிரியான பிரபல ஹாலில் நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி… இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள நினைப்பவர்களும், ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும் முன்னேறிவிடலாம் என்று துடிப்பவர்களும், ஏதாவது ஒரு நல்ல வேலை கிடைத்துவிடாதா என்கிற ஏக்கத்தில் இருப்பவர்களும், கைவசம் கொஞ்சம் பணம் இருக்கிறது; எதில் முதலீடு செய்தால் எக்கசக்கமான லாபம் பார்க்கலாம் என்று யோசிப்பவர்களும்தான் இந்தக் கூட்டத்தில் அதிக அளவில் கலந்துகொள்கிறார்கள்.
விளம்பரங்கள் மூலம் பணம்…
முதல்கட்ட விசாரணையில் இந்த நிறுவனம், ஒரு ‘நெட்வொர்க் மார்க்கெட்டிங்’ என்று தெரியவந்தது. இந்த நிறுவனம் 2020-ம் ஆண்டில் இருந்து அதாவது, கொரோனாவில் பல பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்ட காலகட்டத்திலிருந்து தமிழகமெங்கும் கிளைகளைப் பரப்பி இயங்கிக்கொண்டிருக்கிறது. வீட்டில் இருந்து கொண்டே தங்களது நிறுவன மொபைல் ஆப்பில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலம் சம்பாதிக்கலாம் என மக்களிடம் தங்களைப் பிரபலப்படுத்தி இருக்கிறது.
இந்த நிறுவனம் சொல்வதை நம்பும் மக்களில் பலரும், இந்த நிறுவனத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த நிறுவனம் என்ன தொழில் செய்கிறது, நிறுவனத்தின் பிசினஸ் மாடல் என்ன, எப்படி லாபம் தருகிறது என்கிற கேள்விகளை எல்லாம் யாரும் கேட்டமாதிரி தெரியவில்லை. உறுப்பினர் ஆவதற்காகச் செலுத்தும் தொகைக்கு ஈடாக ஆயுர்வேத பொருள்களை இந்த நிறுவனத்தின் சார்பில் தந்துவிடுவதாலும், இந்த நிறுவனத்தின் ஆப்பில் இருக்கும் விளம்பரங்களைப் பார்ப்பதால் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஈட்டி விடுவதாலும் மக்கள் இந்த நிறுவனத்தை முழுமையாக நம்புகிறார்கள்.
ரூ.360 முதல் ரூ.1,21,260 வரை…
இந்த நிறுவனத்தில் ஒரு நபர் அடிப்படை உறுப்பினராகச் சேருவதற்கு ரூ.360, சில்வர் உறுப்பினராக ரூ.3,060, கோல்டன் உறுப்பினர் ஆவதற்கு ரூ.30,360, டைமண்ட் உறுப்பினர் ஆவதற்கு ரூ.60,660 மற்றும் கிரவ்ன் உறுப்பினர் ஆவதற்கு ரூ.1,21,260 என இந்த நிறுவனம் வசூலிக்கிறது.
தவிர, வீட்டு உபயோகப் பொருள்களையும் ‘MyV3Ads’ என்கிற பிராண்டின்கீழ் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி, இந்த நிறுவனத்தின் உறுப்பினர்களிடையே விற்பனை செய்து வருவதன் மூலமும் பெரும் வருமானத்தை ஈட்டி வருகிறது. இதற்கென தனியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 450 ஸ்டோர்களை அமைத்திருப்பதாக இந்த நிறுவனம் சொல்கிறது. குறிப்பாக, கோவையில் மட்டும் 58 ஸ்டோர்கள் இயங்குகிறதாம். இந்த ஸ்டோர்களை வைத்திருப்பவர்களும் இந்த நிறுவனத்தில் பணம் கட்டி உறுப்பினர்களாக இருப்பவர்கள்தான்.
காசு வருது… ஆனா வரல!
இந்த நிறுவனத்தில் பணத்தைக் கட்டி உறுப்பினர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதை அறிய ஒரு சிலரிடம் பேசினோம். ‘‘விளம்பரத்தை இடைவிடாமல் பார்த்துக் கொண்டே இருப்பதால், மாதத்துக்கு சில ஆயிரம் பணம் வருகிறது’’ என்றார்கள். ஒரு சிலர், ‘‘ஆரம்பத்துல வந்துச்சு, ஆனா, இப்ப பெரிசா வர்றதில்ல. ஆப்ளிகேஷன்ல நிறைய டெக்னிக்கல் பிரச்னைகள் இருக்கு. விளம்பரங்களைப் பார்த்துட்டு இருக்கும்போதே பிளாங்க் ஆயிடுது.
அதனால நான் அந்த ஆப்ளிகேஷன்ல இருந்து வெளிய வந்துட்டேன்’’ என்றார் இன்னொருவர். இன்னும் சிலர், ‘‘இந்த ஆப்ல காட்டுற விளம்பரங்கள் எல்லாம் லோக்கல் ஏரியா விளம்பரங்களாகத்தான் இருக்கு. அது மட்டுமல்லாம தினமும் இந்த நிறுவனத்தோட அறிவிப்புகளும் விளம்பரங்களாக வருது” என்கிறார்கள்.
பயனாளர்கள் இப்படிச் சொல்ல, கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களின் கமென்ட்ஸ்களைப் பார்த்தால், அங்கேயும் ஒரே புலம்பல் மயம்.
எப்படி… எப்படி… எப்படி?
இந்த நிறுவனம் ஆப் வழியாக விளம்பரங்களைப் பார்க்கும் தனது உறுப்பினர்களுக்கு எப்படி பணத்தைக் கொடுக்கிறது என்கிற ஆராய்ச்சியில் இறங்கினோம்.
இந்த நிறுவனத்தில் தற்போது வரை சுமார் 35 லட்சம் வாடிக்கையாளர்கள் இருப்பதாக இந்த நிறுவனம் சொல்கிறது. அதில் கிட்டத்தட்ட 95% பேர் கட்டணம் எதுவுமின்றி சேர்ந்தவர்கள். மீதமுள்ள 5% நபர்கள் கட்டண உறுப்பினர்கள்.
இந்த 95% பேர் அதாவது, 33.25 லட்சம் பேர் கட்டணம் இல்லாமல் சேர்ந்திருக்கிறார்கள் என வைத்துக்கொண்டாலும், மீதமுள்ள 1.75 லட்சம் பேர் ரூ.360 – ரூ.1.21 லட்சம் வரை தொகையைக் கட்டி உறுப்பினர் ஆனவர்கள்தான். இதில் அதிகபட்சம் 10,000 பேர் கிரவ்ன் உறுப்பினர்கள் என்று வைத்துக்கொண்டால்கூட ரூ.121 கோடியை (10,000 Xரூ.1.21 லட்சம்) இந்த நிறுவனம் வசூல் செய்திருக்க வாய்ப்புண்டு. இந்தப் பணத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்துத்தான் மாதம்தோறும் தனது உறுப்பினர்களுக்குத் தந்து வருவதாகச் சொல்கிறார்கள் இந்த நிறுவனத்தின் உள்விவகாரம் தெரிந்தவர்கள்.
இந்த நிறுவனம் தொடங்கியபோதே பணம் கட்டிச் சேர்ந்தவர்கள், கொஞ்சம் பணத்தையாவது சம்பாதித்திருப்பார்கள். ஆனால், சமீப காலத்தில் சேர்ந்தவர்களுக்குக் கட்டிய பணம் கூட கிடைக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள் வேறு சிலர்.
நிறுவனத்தின் பதில் என்ன?
இந்த நிறுவனம் மீது சொல்லப்படும் புகார்களுக்கு என்ன பதில் என்பதை அறிய இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்யானந்துடன் மொபைலில் பேசினோம். “நீங்கள் நேரடியாக என்னை வந்து சந்தித்தால் என் நிறுவனத்தின் அனைத்து விவரங்களையும் சொல்கிறேன்’’ என்றவரிடம், நாம் பல கேள்விகளை முன்வைத்தோம்.
‘MyV3Ads’ நிறுவனத்தை முறைப்படி பதிவு செய்திருக்கிறீர்களா என்று நாம் கேட்டதற்கு, ‘‘இன்னும் பதிவு செய்யவில்லை. நீங்கள் எங்கே பதிவு செய்ய வேண்டும் எனச் சொல்லுங்கள். நாங்கள் அங்கே பதிவு செய்கிறோம்’’ என்றார். ‘‘நிறுவனத்தைப் பதிவே செய்யாமல் எப்படி நடத்துகிறீர்கள்’’ என்று கேட்டதற்கு, அதற்கு அவர் சரியான பதிலைச் சொல்லவில்லை.
‘‘உங்கள் நிறுவனம் எப்படி வருமானம் ஈட்டுகிறது. எப்படி உங்கள் உறுப்பினர்களுக்கு மாதம்தோறும் பணம் தருகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர், ‘‘நாங்கள் தயாரிக்கும் பொருள்களை விற்பனை செய்து அதிலிருந்து ஈட்டும் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை எங்கள் உறுப்பினர்களுக்குத் தருகிறோம்’’ என்றார்.
‘‘கடந்த மார்ச்சில் இருந்துதானே பொருள்களை விற்கிறீர்கள். ஆனால், 2020-ம் ஆண்டில் இருந்தே மாதம்தோறும் பணம் தருகிறீர்களே…’’ என்று நாம் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை!
ஆக, இந்த நிறுவனத்தின் பிசினஸ் மாடலில் ஏதோ குளறுபடி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. தெளிவான பிசினஸ் மாடலை வைத்து பிசினஸ் செய்யும் நிறுவனங்களே திக்குமுக் காடிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் தெளிவில்லாத பிசினஸ் மாடலை வைத்து இயங்கும் இந்த நிறுவனம் எப்படி லாபம் சம்பாதித்துத் தரும்?
இந்த நிறுவனத்தில் பணம் போட்டவர்கள் கட்டாயம் கேட்க வேண்டிய கேள்வி இது!