பாட்னா,
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அவர் மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து விலகி, பின்னர் பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக கடந்த ஞாயிற்று கிழமை மாலை பொறுப்பேற்று கொண்டார்.
தொடர்ந்து, சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்-மந்திரிகளாக பொறுப்பேற்று கொண்டனர். 6 பேர் கேபினட் மந்திரிகளாக பதவியேற்றனர்.
நிதிஷ் கூட்டணியில் இருந்து விலகி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது பற்றி காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, சின்ன அழுத்தம் கொடுத்தால் போதும். நிதிஷ் குமார் ‘யு டர்ன்’ போட்டு திரும்பி விடுவார் என்று கூறினார்.
இந்நிலையில், பாட்னா நகரில் துணை முதல்-மந்திரி விஜய் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த இடத்தின் சமூக மற்றும் புவியியல் நிலைகளை பற்றி ராகுல் காந்தியால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது.
ஏனென்றால், அவர் வாயில் தங்க கரண்டியுடன் பிறந்தவர். கீழ்மட்டத்தில் உள்ளவர்களுடன் நேரம் செலவிட்டு பழகியவர்களுக்கு நிலைமையை புரிந்து கொள்ள முடியும்.
ஆனால், குற்ற மற்றும் ஊழல் மனநிலை கொண்ட அரச குடும்பங்களில் இருந்து வந்தவர்களால், பொதுமக்களின் வலியை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.