கடந்த 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. 70 ஏக்கர் நிலத்தில், முதற்கட்டமாக 2.67 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் கட்டப்பட்டது. இறுதிக் கட்ட கோயில் கட்டுமானம் 2025 டிசம்பரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு ரூ.1,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு, நன்கொடை வசூலிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், “பா.ஜ.க அரசு மத அரசியல் செய்கிறது.
இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்காத கோயிலை இவ்வளவு அவசரமாகத் திறக்க காரணம் என்ன… பா.ஜ.க-வுக்கு ராமர் மீது பக்தியெல்லாம் கிடையாது. தேர்தலை முன்னிட்டு அரசியல் செய்து வாக்கு அறுவடை செய்கிறது” என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யரின் மகள் சுரண்யா அய்யர், ராமர் கோயில் திறப்பு விழா அன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ `பிராண பிரதிஷ்டை’ விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூன்று நாள்கள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். இந்த உண்ணாவிரதம் மூலம், சக முஸ்லிம் குடிமக்களுக்கு அன்பையும் எனது வருத்தத்தையும் வெளிப்படுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று மணி சங்கர் அய்யர் மற்றும் அவரின் மகளுக்கு, அவர்கள் குடியிருப்பின் `குடியிருப்பாளர்கள் நலச் சங்கம்’ நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதில், “500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. அதுவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு கட்டப்பட்டிருக்கிறது என்பதை சுரண்யா அய்யர் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.
உங்கள் பேச்சு சுதந்திரம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்கும் அளவு கிடையாது என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். மக்கள் மத்தியில் வெறுப்பையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி யாரையும் தூண்டிவிடாதீர்கள். ஒரு நல்ல குடிமகன் என்ற நெறிமுறைகளை தயவுசெய்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களின் ராமர் கோயில் குறித்த விமர்சனப் பதிவுக்கு மன்னிப்புக் கேளுங்கள். மணி சங்கர் அய்யர் தன் மகளைக் கண்டிக்க வேண்டும் அல்லது இந்தக் குடியிருப்பை காலி செய்துவிட்டு, இது போன்ற கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் குடியிருப்புக்குச் சென்றுவிடுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டத்தில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.