புதுச்சேரி: “30-40 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பெண்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது” என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரி பல்கலைகழகம், சமூகவியல் துறை சார்பில் ‘பாலினம், சுகாதாரம், மற்றும் நிலையான வளர்ச்சி: தேசிய மற்றும் உலகளாவிய பார்வை’ என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் பண்பாட்டு மையக் கருத்தரங்க அறையில் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை குத்து விளக்கேற்றி கருத்தரங்கினைத் தொடங்கி வைத்தார். புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர்(பொறுப்பு) டாக்டர் தரணிக்கரசு மற்றும பேராசிரியர்கள். ஆய்வாளர்கள், மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆளுநர் பேசியது: “ஒரு சமூக வளர்ச்சிக்கான அடையாளம் அந்த நாட்டில் நிலவும் பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. சமூகமானது இப்போது சரிசமமாக வாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. அதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். நான் 14 பல்கலைக்கழகத்திற்கு வேந்தராக இருக்கிறேன். துணைவேந்தர்களின் மாநாடு ஒருமுறை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நான், ‘பெண்கள் எத்தகைய துறைகளில் அதிகம் படிக்கிறார்கள்’ என்று கேள்வி கேட்டேன். அதற்கு அவர்கள் கலை அல்லது சுலபமான துறைகளிலேயே அதிகம் படிக்கிறார்கள் என்று சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இதைப் போலவே முன்பு பெண்கள் மருத்துவம் படிப்பதாக இருந்தால் மகப்பேறு துறையில் தான் அதிகம் படித்தார்கள். ஆனால் இப்போது இருதயவியல், சிறுநீரகவியல், எலும்பியல் போன்ற பல்வேறு துறைகளில் படிக்கிறார்கள். ஆராய்ச்சிகளிலும் பெண்கள் மிக குறைவாகவே இருந்தார்கள். ஏனென்றால், அதுபோன்று கடுமையான துறைகளில் படிக்க வேண்டுமென்றால் நீங்கள் அதிகமாக நேரம் செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. அதற்கு ஒருவரின் குடும்பமும் சமூகமும் ஆதரிப்பது சிரமமான ஒன்றாக இருக்கிறது.
அரசியலில்கூட ஒருவர் அதிகமான நேரம் பொதுவாழ்வில் செலவிட வேண்டிய சூழல் இருக்கும். அதில் ஆண்கள் அதிக நேரம் வெளியே இருந்து பணியாற்றும்போது ஒரு வித பார்வையும் ஒரு பெண் அத்தகைய நிலையில் பணியாற்றும்போது வேறொரு பார்வையும் சமூகம் முன்வைக்கிறது. அதன்பிறகு நான் அனைத்து துணைவேந்தர்களையும் பெண்களுக்கு ஆராய்ச்சி துறை சார்ந்த மற்றும் கடினமான துறை சார்ந்த வாய்ப்புகளை அதிகம் வழங்க வேண்டும் என்று கூறினேன். பெண்கள் பெரும்பாலும் உயர் கல்வி படிப்பது திருமணத்திற்காக என்று பதிலளித்தார்கள்.
அமைச்சர் பதவியில்கூட பெண் அமைச்சர்கள் முன்பு பதவியில் இருந்தால் அவர்கள் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் துறையிலே இருப்பார்கள். ஆனால் இப்போது பிரதமர் மூலம் மத்திய நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் பெண்களாக இருக்கிறார்கள்.
அரசு பெண் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. எனவே கிடைக்கும் வாய்ப்புகளை பெண்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 30-40 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. பெண்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. சமூகம் இயங்கிக்கொண்டு இருக்கும் தற்போதைய சூழலில் இருந்துகொண்டே உங்கள் குடும்பத்தில் கிடைக்கும் உதவிகளை பயன்படுத்த வேண்டும்.
உங்களுக்குள் இருக்கும் உறுதியை வைத்து சவால்களை சந்திக்க வேண்டும். நான் பல கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அதிகமான அளவில் பெண்கள் முதலிடங்களை பெறுகிறார்கள். அனைவரும் உங்களது முன்னேற்றத்தினை உங்கள் கடமையாக கருத்தில் கொண்டு, நீங்களும் உங்களோடு நாட்டையும் முன்னேற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.