பெங்களூரு : போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஹெப்பாலில் இருந்து அரண்மனை மைதானம் வரையிலான 3 கி.மீ.,க்கு ‘டபுள் டெக் சுரங்கப்பாதை’ அமைக்க, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பெங்களூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண, மாநில அரசு நகரில் சுரங்கப்பாதை சாலை அமைக்க திட்டமிட்டது. இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை அளிக்கும்படி, அல்டிநாக் கன்சல்டிங் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது. அந்நிறுவனமும், சமீபத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில், ‘ஹெப்பாலில் இருந்து அரண்மனை மைதானம் வரை 3 கிலோ மீட்டருக்கு ‘டபுள் டெக் சுரங்கப்பாதை’ அமைக்கப்படும்.
சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் மூன்று வழிப்பாதையாகவும், கீழ் பகுதியில் இரண்டு வழிப்பாதையாகவும் இருக்கும். 3 கி.மீ., சுரங்கப்பாதைக்கு, 1 கி.மீ.,க்கு 500 கோடி ரூபாய் வீதம் 1,500 கோடி ரூபாய் வரை செலவிடப்படும். இதை மாநில அரசே ஏற்கும் என்றும், இதற்கான நிதியை, 2024 – 25ம் ஆண்டு பட்ஜெட்டில் அரசு வழங்க உள்ளது.
தற்போது ஹெப்பால் அருகே புறநகர் ரயில் திட்டமும், மெட்ரோ ரயில் திட்டமும் பணிகள் நடந்து வருகின்றன. சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி துவங்க உள்ளது. இந்த சுரங்கப்பாதை அமைந்தால், அரசு கால்நடை மருத்துவமனை கல்லுாரி மற்றும் அரண்மனை மைதானம் முன்புறம் என இரு நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
பெங்களூரு மாநகராட்சி முதன்மை பொறியாளர் பிரஹலாத் கூறியதாவது:
சோதனைக்காக அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை, ‘படகு’ போன்று வடிவமைக்கப்படும். நிலத்தடியில் சுரங்கப்பாதை அமைப்பதால், மரங்களை வெட்டுவது, நிலம் கையகப்பட தேவையில்லை. இதனால் இத்திட்ட செலவு குறைவாக இருக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement