இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாது ‘ப்ளூ ஸ்டார்’.
அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்வி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டே வாழ்க்கையாகக் கருதும் இரு அணிகள் வழியாக சமூக அரசியல் பேசும் இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, நடிகரும், இயக்குநர் பாண்டியராஜன் மகனுமான பிரித்வி நடித்த ‘சாம்’ கதாப்பத்திரம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. படத்தில் அவர் சொல்லும் காதல் கவிதைகளும் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் இப்படம் மூலம் தனக்குக் கிடைத்த வரவேற்புக் குறித்தும் தான் பேசிய கவிதைகள் ட்ரெண்டாவது குறித்தும் படத்தின் வெற்றி விழா மேடையில் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் நடிகர் பிரித்வி.
இது குறித்து பேசியுள்ள அவர், “திரைப்பட வெற்றி விழா மேடைகளை நிறையப் பார்த்திருக்கேன். இப்போ நானே அந்த மேடையில் நிற்கிறேன். நிறைய இடங்களுக்குச் செல்லும்போது என்னை எல்லோரும் பாண்டியராஜன் சார் பையன் என்றுதான் சொல்லுவாங்க. அது ஒருவகையில் சந்தோஷமாக இருந்தாலும், நமக்கெனத் தனியாக அடையாளம் இல்லை என்று வருத்தமாக இருக்கும்.
ஆனால், இந்தப் படத்திற்குப் பிறகு என்னைப் பார்க்கும் எல்லோரும் ‘சாம்’ என்றுதான் அழைக்கிறார்கள். பிறகுதான் என் பெயர் ‘பிரத்வி’ என்று தெரிந்துகொள்கிறார்கள். நன்றாக நடித்துள்ளதாகப் பாராட்டுகிறார்கள். இப்போது எனக்கென ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
‘மெட்ராஸ்’ படத்திலிருந்து பா.ரஞ்சித் சார் படங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளேன். இப்போது அவரது தயாரிப்பில், ஜெய்குமார் சார் இயக்கத்தில் நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்காக அவர்கள் இருவருக்கும் நன்றி
படத்தில் நான் சொல்லும் கவிதைகளை சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதற்குக் காரணம் இயக்குநர் ஜெய்குமார் மற்றும் எழுத்தாளர் தமிழ் பிரபாவும்தான். அந்தக் கவிதைகளை எல்லாம் எழுதியவர்கள் அவர்கள்தான்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.