வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஊழலை எதிர்த்துப் போராடும் நாடுகள் பட்டியலில் 2022ல் 85வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 93வது இடத்திற்கு சரிந்துள்ளது.
உலக வங்கியின் முன்னாள் ஊழியர்களால் 1993ல் நிறுவப்பட்ட ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு, கடந்த 30 ஆண்டுகளாக, ‘சட்டத்தின்படி ஆட்சி செய்து, ஊழலை எதிர்த்துப் போராடும்’ நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்து வருகிறது. இதற்காக உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம், தனியார் ஆலோசனை நிறுவனங்கள் உட்பட 13 தரவு மூலங்களைப் பயன்படுத்தி, தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்கிறது. அதன்படி, 2023ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.
மொத்தம் 180 நாடுகள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் 100 மதிப்பெண்களில் அதிக மதிப்பெண் எடுத்துள்ள நாடுகள் படி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 90 மதிப்பெண்கள் பெற்ற டென்மார்க், தொடர்ந்து 6வது ஆண்டாக ஊழலை எதிர்க்கும் முதல் நாடாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து, 87 மதிப்பெண்களுடன் பின்லாந்து இரண்டாவது இடத்தையும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.
நார்வே, சிங்கப்பூர், சுவீடன், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, லக்சம்பர்க் ஆகிய நாடுகள் 4 முதல் 10வது இடத்தை பிடித்துள்ளன. அமெரிக்கா 69 மதிப்பெண்களுடன் 24வது இடத்தையும், 43 மதிப்பெண்கள் பெற்று சீனா 76வது இடத்தையும் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டில் 85வது இடத்திலிருந்த இந்தியா, இந்த முறை 39 மதிப்பெண்களுடன் 93வது இடத்துக்கு இறங்கியிருக்கிறது. அண்டை நாடான பாகிஸ்தான், 29 மதிப்பெண்களுடன் 133வது இடத்தில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் சோமாலியா கடைசி இடத்தில் இருக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement