India National Cricket Team: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தற்போது பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. கடந்தாண்டு ஓடிஐ உலகக் கோப்பையில் இறுதிப்போட்டியில் தோல்வியுற்று வெளியேறிய பின்னர், டெஸ்ட், ஓடிஐ, டி20 என அனைத்து பார்மட்களிலும் பல வீரர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும், வீரர்களின் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்கான விலகலாலும் பல புதிய வீரர்கள் அணிக்குள் நுழைந்துள்ளனர்.
இந்திய அணியில் நடந்த மாற்றங்கள்
முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நீண்டகாலமாக காயத்தில் இருப்பதால் மூன்று பார்மட்டுகளிலும் அந்தந்த வீரர்களுக்கான மாற்று வீரர்கள் தற்போது வலுபெற்று வருகின்றனர். சமீபத்தில் இஷான் கிஷன் தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர், ஆப்கானிஸ்தான் டி20 தொடர், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் இருந்து அவர் விலகியிருந்தார்.
தற்போது அவருக்கு பதில் துருவ் ஜூரேல் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். டி20 அணியிலும் தற்போது இஷான் கிஷனின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது. அவரின் கிரிக்கெட் வாழ்வில் இது சற்று தொய்வை ஏற்படுத்தலாம் எனவும் வல்லுநர்கள் கணித்துள்ளனர். அதேபோல், 2022 டி20 உலகக் கோப்பை தோல்விக்கு பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்தும், ஓடிஐ உலகக் கோப்பை தோல்விக்கு பின் ஒட்டுமொத்தமாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்தும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஒதுங்க தொடங்கினர்.
விராட் கோலியின் விலகல்
தற்போது, விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் டி20இல் மீண்டும் கால்வைத்துள்ளனர். நடப்பாண்டு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையிலும் இவர்கள் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது. அந்த வகையில், தற்போது நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. அதில், விராட் கோலி முதலிரண்டு போட்டியில் விலகியதால், மிடில் ஆர்டர் மிகுந்த சரிவை சந்தித்தள்ளது எனலாம்.
விராட் கோலி தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து முதலிரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியிருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. விராட் கோலி (Virat Kohli) ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியையும் இதோபோல தனிப்பட்ட காரணங்களுக்காக தவறவிட்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது. இருப்பினும், அதன் காரணம் குறித்து பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக யாரும் தெரிவிக்கவில்லை.
வதந்திக்கு முற்றுப்புள்ளி
அந்த வகையில், பலரும் பல ஊகங்களை முன்வைத்தனர். விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா கருவுற்றிருப்பதாக வதந்திகள் பரவின. மறுபக்கம் விராட் கோலியின் தாயார் உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாகவும் வதந்திகள் பரவின. இருப்பினும், விராட் கோலி தரப்பில் நீண்ட நாள்களாக இதற்கு பதில்கள் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், விராட் கோலியின் சகோதரரான விகாஸ் கோலி (Vikas Kohli) அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “எங்கள் தாயாரின் உடல்நிலை குறித்து பொய்யான செய்திகள் பரவி வருவது எனது கவனத்திற்கு வந்தது. எங்கள் தாயார் முற்றிலும் ஆரோக்கியத்துடனும் நன்றாகவும் இருக்கிறார் என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
மேலும், உரிய தகவல் இல்லாமல் இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என ஊடகங்கள் உள்பட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் அக்கறைக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார். மேலும், விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளை விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட்: ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யருக்கு இடம் கிடைக்குமா?