ஐதராபாத்,
தெலுங்கானா அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்றில் பயணித்த பெண் பயணி ஒருவர் போதையில் இரண்டு நடத்துநர்களை தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனை பார்த்த பஸ்சில் இருந்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றிய வீடியோ வெளியானதன் அடிப்படையில், ஹயத்நகர் டெப்போ மேலாளர் ஜல்காம் விஜய், காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த வீடியோவில், எல்.பி. நகரில் அரசு பஸ்சில் ஏறிய பெண் பயணி ஒருவர், தில்சுக் நகர் நோக்கி பயணித்திருக்கிறார்.
அப்போது, பணியில் இருந்த நடத்துநர் கங்காதரிடம் அந்த பெண் இலவச பயண டிக்கெட் கேட்டிருக்கிறார். அதற்கு ஆதார் அட்டையை காண்பிக்கும்படி நடத்துநர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பெண் தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்திருக்கிறார்.
அந்த பெண் குடிபோதையில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது. ஆதார் அட்டையை கொடுக்க தவறிய அந்த பெண்ணிடம் டிக்கெட்டுக்காக ரூ.15 கொடுக்கும்படி நடத்துநர் கூறியிருக்கிறார்.
அதற்கு அந்த பெண் ரூ.500 நோட்டு ஒன்றை கொடுத்திருக்கிறார். அதற்கு சில்லரை இல்லை என கூறியவுடன், நடத்துநரை அந்த பெண் திட்டியும், காலால் உதைத்தும் இருக்கிறார். பின்னர், எச்சிலை துப்பியும் இருக்கிறார்.
இதனை தடுக்க முயன்ற பெண் நடத்துநர் முத்தியலம்மா என்பவரை அந்த பெண், முடியை பிடித்து இழுத்து, தலையை மோதும்படி செய்திருக்கிறார். இதனை போலீசார் தெரிவித்தனர்.
இதேபோன்று நடத்துநர் கங்காதரும் இந்த விவரங்களை கூறி, முதல்-மந்திரி மற்றும் மூத்த காவல் துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.