இன்சூரன்சு தொகைக்காக மகன் கொலை…!! ரூ.7 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல்; இந்திய தம்பதிக்கு 33 ஆண்டு ஜெயில்

லண்டன்,

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து தம்பதி ஆரத்தி தீர் (வயது 59) மற்றும் அவருடைய கணவர் கவல்ஜித்சின்ஹ ராய்ஜடா (வயது 35). இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ஹான்வெல் பகுதியை சேர்ந்தவர்கள்.

கடந்த 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ரூ.7,393 கோடி மதிப்பிலான கொக்கைன் என்ற போதை பொருளை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர்.

இதுதவிர, இவர்கள் இருவரும் 2017-ம் ஆண்டில் குஜராத்தில் இரட்டை படுகொலைகளை செய்துள்ளனர். இந்த தம்பதியின் தத்தெடுத்த மகனான கோபால் செஜானி (வயது 11), 2017-ம் ஆண்டு குஜராத்தில் வைத்து கடத்தப்பட்டான். அவனை காப்பாற்ற சென்ற ஹர்சுக் கர்தனி என்ற உறவினர் என 2 பேரும் கடுமையாக தாக்கப்பட்டு, கொல்லப்பட்டனர்.

கோபாலை லண்டனுக்கு அழைத்து செல்கிறோம் என ஆசை காட்டி, தத்தெடுத்து வளர்ப்பதுபோல் கூறி விட்டு, குஜராத்தில் ஆள் வைத்து கொலை செய்துள்ளனர். தத்தெடுத்த மகன் மீது இன்சூரன்ஸ் பணம் கட்டி அந்த தொகையை பெறுவதற்காக அவர்கள் கொலைக்கான திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டி கொலை செய்தல் மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன. கோபால் செஜானியின் ரூ.1.58 கோடி காப்பீட்டு தொகைக்காக இந்த படுகொலைகள் நடந்துள்ளன. எனினும், இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் இருந்து இந்த தம்பதி தப்பியது. அதற்கேற்ப, குஜராத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், அது தங்களுடைய மனித உரிமைகளை மீறும் வகையில் இருக்கும் என இங்கிலாந்து கோர்ட்டில் கூறி தப்பினர்.

இந்த சூழலில், இவர்களின் போதை பொருட்கள் கடத்தல் விவரங்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் கண்டறிந்து, இங்கிலாந்து தேசிய குற்ற முகமைக்கு (என்.சி.ஏ.) தகவல் அளித்து உஷார்படுத்தினர்.

இதனை தொடர்ந்து நடந்த சோதனையில், 514 கிலோ (0.6 டன்கள்) கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.600 கோடி ஆகும். அதனுடன், உலோக பெட்டிகளில் மறைத்து வைத்து, வர்த்தக விமானங்களில் உலகம் முழுவதும் இதுபோன்று 7 டன்கள் அளவிலான போதை பொருட்களை அவர்கள் கடத்திய அதிர்ச்சி விவரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த தம்பதி இருவருக்கும், விமான நிறுவனம் மற்றும் சரக்கு தொழிலில் முன் அனுபவம் இருந்துள்ளது. இவர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் பணியாற்றி உள்ளனர். அதனை அடிப்படையாக கொண்டு அவர்கள் இந்த போதை பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு இருக்க கூடும் என என்.சி.ஏ. கூறுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்தபோதிலும், நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் முடிவில் அவர்கள் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இருவருக்கும் தலா 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி எட்வார்டு கான்னெல் உத்தரவிட்டு உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.