கதை திருட்டு சர்ச்சை : உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஸ்ரீமந்துடு இயக்குனருக்கு நெருக்கடி

தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் கொரட்டலா சிவா. கடந்த வருடம் சிரஞ்சீவி, ராம்சரணை வைத்து இவர் இயக்கிய ஆச்சார்யா திரைப்படம் தோல்வியடைந்த நிலையில் தற்போது ஜூனியர் என்டிஆரை வைத்து தேவரா என்கிற படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2015ல் மகேஷ்பாபுவை வைத்து இவர் இயக்கிய ஸ்ரீமந்துடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே சமயம் அந்த நேரத்தில் அந்தப் படத்தின் கதை, தான் ஒரு வார இதழில் எழுதி வந்த தொடர்கதையை திருடி எடுக்கப்பட்டுள்ளது என அதன் கதாசிரியர் ஆர் டி வில்சன் என்கிற சரத் சந்திரா என்பவர் ஆந்திராவில் உள்ள நம்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.

அப்போது கொரட்டலா சிவாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. இதனை தொடர்ந்து கொரட்டலா சிவா உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றமும் நம்பள்ளி நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இதனால் தற்போது கொரட்டலா சிவா சட்டப்படியான நடவடிக்கையை சந்திக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார். இந்த சமயத்தில் அவர் தரப்பிலிருந்து கதாசிரியர் சரத் சந்திராவுடன் சமரசம் செய்து கொண்டு சென்றால் நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த தீர்ப்பானது கொரட்டலா சிவாவின் திரையுலக பயணத்தில் சறுக்கலை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. முன்னதாக வெளியான இவரது ஆச்சார்யா படத்திற்கு கூட தனது கதையை திருடி தான் படமாக்கி உள்ளார் என ஒரு கதாசிரியர் குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.