கரூரில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.எஸ்.பி-யிடம், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க-வினரோடு வந்து புகார் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க கழக பொதுச்செயலாளர், புரட்சி தமிழர் அண்ணன் எடப்பாடியார், ‘பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ-வின் மகன் மற்றும் மருமகள் சேர்ந்து, அவர்களது வீட்டில் வேலை செய்துவந்த பட்டியலின சமூகப் பெண்ணை மிகக் கொடுமையாக தாக்கியிருக்கிறார்கள். அப்படி தாக்கிய அவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என அ.தி.மு.க சார்பில் அறிவித்தார். அது தொடர்பாக, கரூர் மாவட்டத்தில் வேலுச்சாமிபுரம் பகுதியில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், நகர காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் அனுமதி கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது. முதல்நாள் வரை அனுமதிக்காத நிலையில், ‘நீங்கள் நடத்திக் கொள்ளலாம்’ என வாய்மொழி உத்தரவு அளித்தனர். ஆனால், திடீரென அ.தி.மு.க மாவட்ட கழக அவைத்தலைவர் திருவிக அவர்களின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடம், இரண்டுவழிச் சாலையாக இருக்கிறது. அதில் ஒருவழிச் சாலையில் உங்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள்’ எனக் கூறினார்கள். ஆனால், மறுபடியும் கடைசி நேரத்தில் காவல்துறை அந்த இடத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்து கடிதம் கொடுத்துள்ளனர்.
இப்படி, கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து விடியா தி.மு.க அரசின் காவல்துறை, தி.மு.க-வினருக்கு ஏவல்துறையாக வேலை செய்து வருகிறது. இதனால், தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திற்கும் கரூர் மாவட்டத்தில் மட்டும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி வாங்கும் நிலை உள்ளது. தி.மு.க கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குகின்றனர். அதேபோன்று, தி.மு.க-வினர் உண்ணாவிரதத்திற்கு சாலையை மறித்து நடத்துகின்றனர். அதற்கு இந்த காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, தடுக்கவில்லை. ஆனால், நாங்கள் நடத்தும் போராட்டங்களை மட்டும் தடுக்கிறார்கள். கரூரில் கந்து வட்டி கொடுமையால் ஒரு பெண் இறந்துவிட்டார். அதில் உண்மையான குற்றவாளிகளை இன்று வரை கைதுசெய்யாத நிலையில், அதில் சம்பந்தமில்லாத மூன்று நபர்களை கைதுசெய்தனர்.
உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்ய முடியாத காவல்துறை, அ.தி.மு.க கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மட்டும் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இப்படி ஓரவஞ்சனையாக செயல்படும் காவல்துறை நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். கோர்ட் உத்தரவு பெற்ற பின்னர் கரூரில் மற்றொரு நாளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.