சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் வரும் பிப்ரவரி 12-ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். 2024-25-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வரும் 19-ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 174/1-ன் கீழ், தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தினை, வரும் பிப்.12-ம் தேதி, காலை 10 மணிக்கு கூட்டியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 176/1-ன் கீழ், அந்த கூட்டத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. உரை நிகழ்த்துகிறார். மேலும், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 2024-25ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வரும் 19-ம் தேதியன்று தாக்கல் செய்யவுள்ளார்.
தொடர்ந்து, பிப்.20ம் தேதி, 2024-25ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையினையும், வரும் 21-ம் தேதி 2023-24 ஆண்டுக்கான கூடுதல் செலவின மானியக் கோரிக்கையினையும் தாக்கல் செய்யவுள்ளார், என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை பிரச்சினை தொடர்பான நீதிமன்ற வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நீதிமன்றம் சட்டப்பேரவை, சட்டப்பேரவைத் தலைவரை கட்டுப்படுத்தாது. அவர்கள் தொடர்ந்துள்ள வழக்கில், நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறதோ, அது வேறு விஷயம். ஆனால், சட்டப்பேரவைக்குள் ஒரு உறுப்பினரை எங்கு அமரவைக்க வேண்டும் என்பது தொடர்பான முழு உரிமையும், சட்டப்பேரவைத் தலைவருக்குத்தான் உண்டு என, நானும் கூறுகிறேன். இதற்கு முன்பு சபாநாயகராக இருந்த தனபாலும், சட்டமன்றத்திலேயே வெளிப்படையாக கூறியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.