சென்னை: சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரியில் தொடங்க இருந்த நிலையில், வெள்ள நிவாரணம், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதல் உள்ளிட்ட காரணங்களால் பேரவையின் முதல் கூட்டம் தள்ளிப்போனது. இதற்கிடையே, கடந்த ஆண்டு தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரும் முடித்து வைக்கப்படாமல் இருந்தது. ஆளுநர் – தமிழக அரசு இடையிலான பனிப்போர் காரணமாக, ஆளுநர் உரை இல்லாமலே கூட்டத்தொடரை ஆரம்பிக்கலாமா என்ற பேச்சும் எழுந்தது.
இந்த சூழலில், சமீபத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம்பெறுவதும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு பிப்ரவரி 7-ம் தேதி அவர் தமிழகம் திரும்புகிறார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டது.
அந்த வகையில், பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 12-ம் தேதி ஆளுநர் உரையும், 13, 14-ம் தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதமும் நடைபெறும் என்று பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழக பட்ஜெட் எப்போது? மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி இறுதியில் மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் முடிந்ததும், தொடர்ந்து தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முனைப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, தமிழக பொது பட்ஜெட் பிப்ரவரி 19-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 20-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பொது பட்ஜெட் தொடர்பாக தொழில் துறையினர், வணிகர்களுடன் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஏற்கெனவே ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் குறித்து கருத்து கேட்கும் விதமாக, விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், முட்டை உற்பத்தியாளர்கள், வேளாண் விளைபொருள் விற்பனையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், சக்கரபாணி, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்தனர்.