புதுடெல்லி: டெல்லியில் ஏற்கெனவே கடும் குளிர் வாட்டிவந்த நிலையில் நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய மழையும் இணைந்துள்ளது. டெல்லி மட்டுமல்லாது வட மாநிலங்கள் பலவற்றிலும் நேற்று (ஜன.31) பின்னிரவு தொடங்கி மழை பெய்து வருகிறது. இதனால் விமான, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று (பிப்.1) காலை 5.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நரேலாவில் 25 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மழை பெய்தாலும் குளிர் குறையவில்லை. டெல்லியில் இன்று (பிப்.1) காலை குறைந்தபட்ச வெப்பநிலை 7.3 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட மிகமிகக் குறைவு. புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 18.6 டிகிரி செல்சியஸ். இதுவும் இயல்பைவிட குறைவு.
இந்திய வானிலை ஆய்வு மையமானது, இன்று டெல்லி மற்றும் நாட்டின் சில பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள நரேலா, பாவனா, அலிபூர், புராரி, ரோஹினி, கராவல் நகர், என்சிஆர், லோனி தேஹத், காசியாபாத், இந்திராபுரம், நொய்டா, குருகிராம், மனேசர் உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேற்கு இமாலயப் பகுதிகளான ஜம்மு காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக டெல்லியில் இன்று ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டெல்லி வரும் ரயில்கள் தாமதமாக வந்து சேர்கின்றன. விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றத்தில் இது ஒரு பரபரப்பான நாள் என்ற நிலையில் தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. மழைக்கு மத்தியில் இன்று பட்ஜெட் தாக்கலாகிறது.