கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மன்னராகஇப்ராஹிம் இஸ்கந்தார் (65) நேற்று பொறுப்பேற்றார். மலேசியாவில் 13மாகாணங்கள் உள்ளன. இவற்றில் 9மாகாணங்களில் அரச குடும்பங்கள்உள்ளன. இந்த அரச குடும்பங்களில் இருந்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில், மலேசியாவுக்கான மன்னர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் ஜோஹர் மாகாணத்தின் சுல்தானாக பொறுப்பு வகித்துவந்த இப்ராஹிம் இஸ்கந்தார், தற்போது மலேசியாவின் புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அவருக்கு முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.மலேசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இப்ராஹிம் இஸ்கந்தார் திகழ்கிறார். அவரது அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு 5.7 பில்லியன் டாலர் (ரூ.47,300 கோடி) ஆகும். ஆனால், அவரது உண்மையான சொத்து மதிப்பு இதை விட பலமடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ரியல் எஸ்டேட், சுரங்கம் ஆரம்பித்து தொலைத் தொடர்பு வரை பலதரப்பட்ட துறைகளில் அவர் கால்பதித்துள்ளார். ‘யு மொபைல்’ என்ற மலேசியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனத்தின் 24 சதவீதப் பங்குகள் அவர் வசம் உள்ளது. இவருக்கு டயர்சால் பூங்கா உட்பட சிங்கப்பூரில் 4 பில்லியன் டாலருக்கு (ரூ.33,200 கோடி) நிலம் உள்ளது. பங்குச் சந்தையில் மட்டும் 1.1 பில்லியன் டாலர் (ரூ.9,150 கோடி) முதலீடு மேற்கொண்டுள்ளார்.
போயிங் உட்பட தனியார் ஜெட் விமானங்கள், 300 சொகுசு கார்கள் அவருக்கு சொந்தமாக உள்ளன. அவரது குடும்பத்தினருக்கென்று தனி ராணுவமும் உள்ளது.
உலகிலேயே சுழற்சி முறையில் மன்னரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை மலேசியாவில் மட்டுமே உள்ளது. நாட்டின் நிர்வாக அதிகாரம் பிரதமர் மற்றும் நாடாளுமன்றம் வசமே இருக்கும். மதம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் பொறுப்பு மன்னர் வசம் இருக்கும்.