சென்னை: திமுக தேர்தல் பணிக்குழு நடத்தும் மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டமானது, அமைச்சர் உதயநிதியை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கும் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வாகவும் மாறி வருகிறது.
வாரிசு அரசியல் கட்சி என்று திமுக மீது விமர்சனங்கள் தொடர்ந்தாலும்,அவற்றை கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த கட்சி நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலினை கட்சியினர் ஏற்றுக்கொண்டதைப்போல், அவரது மகன் உதயநிதிக்கும் கட்சியில் உரிய முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
இதில், சீனியர் முதல் ஜூனியர் வரை யாரும் விதிவிலக்கல்ல. உதயநிதியும் கட்சியில் தனக்கான இடத்தை உயர்த்தும் வகையில், கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதுடன், நாட்டு நிகழ்வுகளில் பெரும் பாலானவற்றில் அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.கட்சியினர் மத்தியிலும் இதன் மூலம் பிரபலமடைந்து வருகிறார்.
இதையே சமீபத்தில் ‘திமுகவில் அடுத்தடுத்து தளபதிகள் உருவாகுவதாக’ அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான் சமீபத்தில், கட்சியின் இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை சிறப்பாக நடத்தியதாக உதயநிதியை முதல்வர் பாராட்டினார்.
இதையடுத்து தற்போது நாடாளுமன்ற தேர்தலும் வரவுள்ளதால் திமுக சார்பில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவில் சீனியர் அமைச்சர்களுடன் ஜூனியரான உதயநிதிக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, திமுகவுக்கு சாதகமற்ற கோவை மாவட்டம் அடங்கிய மேற்கு மண்டலம் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவே, திமுக தலைமை அவருக்கு வைக்கும் தேர்வு என்கின்றனர் நிர்வாகிகள்.
அத்துடன் இந்த தேர்தலில், திமுக வேட்பாளர்கள் தேர்விலும் உதயநிதியின் பங்கு அதிகளவில் இருக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப, அவர் தனக்கு நெருக்கமானவர்கள், இளைஞரணியின் முக்கிய பொறுப்பாளர்களிடம் குறிப்பிட்ட சில தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்க அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தற்போது தேர்தல் பணிக்குழு சார்பில், தேர்தல் பணிகள் தொடர்பாக நடைபெற்று வரும் கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி தவறாமல் பங்கேற்கிறார். சீனியர் அமைச்சர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இருந்தாலும், உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அத்துடன், வரும் நிர்வாகிகளும் உதயநிதி இருந்தால் அவரிடம் நேரடியாக அறிமுகமாவதுடன், கட்சியில் நிர்வாகிகள் மத்தியில் நடைபெறும் சிறு சிறு பிரச்சினைகளையும் கூறி, அவற்றை நிவர்த்தி செய்துவிடலாம் என்று நினைக்கின்றனர்.
இதுகுறித்து, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இளைஞரணி செயலாளர் அனைத்து மாவட்டங்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகிறார்.ஆனால், பொறுப்பு அமைச்சர்கள்,மாவட்டசெயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்ட சிலநிர்வாகிகள் மட்டுமே அவரைநேரடியாக சந்தித்து பேசும் நிலை இருக்கும். ஆனால், இந்த கூட்டம் அப்படியல்ல; இரண்டு மாவட்டங்களின் நிர்வாகிகள் என்பதால், நேரடியாக அவரை சந்தித்து பேச முடிகிறது.எங்களின் பிரச்சினைகளை தெரிவிக்கும்போது, அவரும் தேர்தல் நேரத்தில் பிரச்சினைகளை மறந்துவிட்டு பணியாற்றுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்.
எங்களிடம் தேவையான தகவல்களையும் கேட்டுப் பெறுகிறார். எங்கள் மண்டலத்துக்கான தேர்தல் பணி பொறுப்பாளருடய கருத்துக்களையும் அவர் கேட்டு செயல்படுகிறார். இந்த தேர்தல் பணிக்குழு கூட்டம் என்பது நேரடி அறிமுககூட்டம் போன்று நடைபெறுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுதவிர, தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணத்தில் உள்ளார். அவர் வரும் பிப்.7ம் தேதி தமிழகம் திரும்புகிறார். அவர் வருவதற்கு முன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை பெரும்பாலும் முடித்துவிட்டு, இறுதியாக பிப்.9-ம் தேதி காங்கிரஸுடன்தொகுதிகளை இறுதி செய்துவிரைவில் அறிவிக்கவும் திமுக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் போட்டியிடும் இடங்களைமுடிவு செய்வதிலும், வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் அமைச்சர் உதயநிதியின் பங்கு அதிகளவில் இருக்கும் என்றும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.