`துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி..!' – காட்டமாக விமர்சித்த ஓபிஎஸ்

புதுக்கோட்டை மாவட்டம், விராச்சிலையில் நடைபெற்ற தனது அணியில் உள்ள நிர்வாகி இல்ல திருமண விழாவில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று மணமக்களுக்கு திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து, திருமணத்தை நடத்தி வைத்தார். அதோடு, திருமணம் நடத்தி வைக்க மேடை ஏறிய ஓ.பி.எஸ்-ஸுக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டதோடு, அவருக்கு வெள்ளி வாளும் பரிசாக வழங்கப்பட்டது. அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்,

திருமண நிகழ்வில் ஓ.பி.எஸ்

“நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஒன்றிய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் பா.ஜ.க கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முழுமையான ஒன்றிய பட்ஜெட்டை உறுதியாக நல்ல முறையில் நாடு சுபிட்சமாக இருப்பதற்கு வெளியிடும். சி.ஏ.ஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாட்டை அதிபுத்திசாலியான எடப்பாடி பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும். ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற பா.ஜ.க-வும், நாங்களும் ஒரே கூட்டணியில்தான் இருக்கின்றோம். அந்த கூட்டணி முறியவில்லை. பா.ஜ.க-வுடன் தொகுதி பங்கீடு முடிந்தவுடன் முதலில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்குத்தான் தெரியப்படுத்தப்படும். 16-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமருடன் மேடை ஏறுவதற்கான வாய்ப்பை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கெனவே, நாங்கள் சொல்லியபடி நானும், டி.டி.வி.தினகரனும் இணைந்துதான் பணியாற்றிக் கொண்டுள்ளோம். சசிகலா இணைந்து பணி செய்வாரா என்பதை அவரிடன்தான் கேட்க வேண்டும். பா.ஜ.க-வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று கூறும் ஜெயக்குமார் பெரிய அறிவாளியா… ஒரு மனிதருக்கோ அல்லது அரசுக்கோ நன்றி என்பது இருக்க வேண்டும். நான்கரை ஆண்டுக்காலமாக ஒன்றிய அரசின் பரிபூரண ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி அணி ஆட்சியில் இருந்தது. இது அனைவருக்கும் தெரியும். இப்போது செய்திருப்பது நம்பிக்கை துரோகம். துரோகம் என்பதற்கெல்லாம் அடையாளம் எடப்பாடி பழனிசாமிதான்.

தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட்டு பயணம், அயல்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக என்று அவர் பேட்டி கொடுத்து விட்டு சென்றுள்ளார். எனவே பொறுத்துதான் பதில் சொல்ல முடியும். தி.மு.க ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் நடைபெற்றதாக இதுவரை தெரியவில்லை. இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காகத்தான் வழங்கப்பட்டது. அது தற்காலிகமானது. இன்னும் யாருக்கும் நிரந்தரமாக ஒதுக்கவில்லை. நிரந்தரமாக யாருக்கு ஒதுக்குவது என்று தீர்ப்பு வரவில்லை. உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் வரும். எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தைப் பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும்.

திருமண நிகழ்வில் ஓ.பி.எஸ்

எடப்பாடி பழனிசாமி, தேர்தலில் நின்று வெற்றி பெறவில்லை. அது, ஜெயலலிதா பெற்ற வெற்றி. அதை நன்றாக அவர் புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா யார் யாருக்கு செய்நன்றி கொடுத்தாரோ அதுபோல் அவர் செய்திருக்க வேண்டும். முதலமைச்சராக இவரை தேர்வு செய்து சசிகலா தான் நியமித்தார். அவருக்கு என்ன நன்றி செலுத்தினார் என்று உங்களுக்கு தெரியுமா… பதவி கொடுத்த சசிகலாவையே கீழ்த்தரமான வார்த்தைகளில் விமர்சித்தார். அதுதான் அவர் செய்த மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். என்றைக்குமே நான் பொறுமையோடுதான் எனது பணிகளையும், கடமைகளையும் செய்வேன். பொறுமையை இழக்க மாட்டேன். நாங்கள் அனைவருமே தொண்டர்களின் விருப்பப்படி அ.தி.மு.க ஒன்று சேர வேண்டும் என்றுதான் கூறுகின்றோம். அனைவரின் எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால், அப்படி சேரக் கூடாது என்று சொல்லக்கூடிய ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி தான். அ.தி.மு.க-வில் நடப்பது உட்கட்சிப் பிரச்னை. துரோகத்தின் வடிவமாக மாறி என்னை வெளியேற்றினார்கள். அது, உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். ஜனநாயகப் படுகொலை செய்தார்கள். நான் என்ன தவறு செய்தேன் என்பதை பகிரங்கமாகச் சொல்லி அதை நிரூபிக்க வேண்டும். தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டேன் என்று சொல்பவர்கள் முட்டாள்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.