சென்னை: “பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சலுகைகள், திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மக்களை, நாட்டை, பொருளாதாரத்தை, பாதுகாப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டவை. அந்த வகையில் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதாவது நாட்டு மக்கள் அனைவரையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லக்கூடிய வகையில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுகிறது, செயல்படுத்தப்படும்” என்று தமாகா தலைவர் ஜிகே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட் பாராட்டுக்குரியது. காரணம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று, முடிவு வெளிவந்த பிறகு ஆட்சி செய்ய இருக்கும் மத்திய அரசுக்கு முன்னேற்பாடான, பயனுள்ள பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. குறிப்பாக இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சலுகைகள், திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மக்களை, நாட்டை, பொருளாதாரத்தை, பாதுகாப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டவை. அந்த வகையில் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதாவது நாட்டு மக்கள் அனைவரையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லக்கூடிய வகையில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுகிறது, செயல்படுத்தப்படும்.
கல்வியில் சீர்திருத்தத்தை புதிய தேசிய கல்விக்கொள்கை மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்திய பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வும் கட்டுக்குள் உள்ளது. அடுத்த 5 ஆண்டுக்குள் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும். நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகளை அதிகரிக்க தனிக்குழு அமைக்கப்படும். அறுவடைக்கு பிந்தைய நடவடிக்கைகள் தொடர்பாக கூடுதல் முதலீடுகள் மேற்கொள்ளப்படும். வீடுகளில் (சோலார்) சூரிய மேற்கூரை அமைத்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். புதிய விமான நிலைய விரிவாக்கம் தொடரும். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும்.
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க 1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும். 5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்கா அமைக்கப்படும். 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்துக்கு உயர்த்தப்படும். பாதுகாப்பு துறைக்கு நிதி 11,11,111 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.மின்சார வாகன உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படும். சரக்கு ரயிலுக்கு பிரத்யேக வழித்தடம் அமைக்கப்படும். மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும். மக்களின் வருவாய் 50 % உயர்ந்துள்ளது. 2023-2024 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 5.8 % ஆக இருக்கும் என்பதையும், 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான வருவாய் இலக்கு 30.80 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே மத்திய இடைக்கால பட்ஜெட் என்பது குறுகிய சில மாதங்களுக்கான பட்ஜெட் என்பதால் அவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்து அனைவருக்கும், அனைத்தும் என்ற நோக்கம் நிறைவேற மத்திய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம் ஆகியவை மத்திய அரசின் தாரக மந்திரம் என்பதால் அதனை உறுதி செய்யும் வகையில் ஆட்சி செய்து வளமான மாநிலங்கள், வலிமையான பாரதம் அமைய இந்த இடைக்கால பட்ஜெட் பயன் தரட்டும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 6-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ததையும், பட்ஜெட்டில் உள்ள முக்கியத்துவத்தையும் கவனத்தில் கொண்டால் அவரது பொருளாதார நிபுணத்துவம், மக்கள் மீதும், நாட்டின் மீதும் கொண்டுள்ள அக்கறை ஆகியவை வெளிப்படுகிறது என்பதால் மத்திய நிதியமைச்சரை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் 2024 -2025 ஆம் நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட்டாக, நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்புக்கான பட்ஜெட்டாக, 2027-ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும் பட்ஜெட்டாக அடுத்து அமைய இருக்கும் மத்திய அரசுக்கு முன்னேற்பாடான, பயனுள்ள பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று கூறி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை வரவேற்று, பாராட்டி, வாழ்த்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.