'நிதி மோசடி, போலி பே மாஸ்டர் முத்திரை’ – நல்லாசிரியர் விருது வாங்கிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கடைவீதி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் நெடுவாசலைச் சேர்ந்த கருப்பையா. இவர், கடந்த 2010 – ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதும், அதற்கு முன்பாக தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றவர். இந்நிலையில், ‘தலைமையாசிரியர் கருப்பையா முறையாக மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில்லை, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நிதி வசூல் செய்து மோசடி செய்துள்ளார். அதோடு, பே மாஸ்டர் முத்திரையை போலியாக பயன்படுத்தி வங்கி கடன் பெற்று மோசடி செய்துள்ளார்’ என்று இவர்மீது உயரதிகாரிகளுக்கு தொடர் புகார் சென்றதாகச் சொல்லப்படுகிறது.

அதன் அடிப்படையில், அறந்தாங்கி கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையா பல்வேறு முறைகேடு செய்திருப்பது தெரிய வந்ததால் அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அறந்தாங்கி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்தார்.

கருப்பையா

இந்நிலையில், நேற்று அந்த உத்தரவை பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர் கருப்பையாவிடம் வழங்க வட்டார கல்வி அலுவலர்கள் கவிதா, கருணாகரன் உள்ளிட்டோர் சென்றபோது, அவர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்த தலைமையாசிரியர் கருப்பையா முன்னதாகவே பள்ளியில் கையொப்பமிட்டுவிட்டு விருப்ப விடுப்பு எடுத்து அங்கிருந்து சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அலுவலர்களை வரவழைத்த பள்ளிக்கல்வித்துறையினர், கருப்பையாவின் தற்காலிக பணியிடை நீக்கத்திற்கான உத்தரவு நகலை ஆசிரியர்கள் முன்னிலையில் அந்த பள்ளி சுவற்றில் கிராம நிர்வாக அலுவலர் உலகநாதன் மூலம் ஒட்ட வைத்தனர்.

மேலும், அந்த உத்தரவு நகலில் கருப்பையாவின் பணி நீக்கத்திற்கான காரணங்களாக 11 காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆசிரியர் கருப்பையா மாணவ மாணவியருக்கு தமிழ் பாடம் நடத்துவதே இல்லை என்றும் புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் குழுவில் போடுவதை மட்டுமே வேலையாக கொண்டு உள்ளார் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆண்டு விழா நடத்துவதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ரூபாய் 400 முறைகேடாக வசூல் செய்துள்ளார் என்றும் புரவலர் திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்களிடம் ரூபாய் 60,000 வசூல் செய்து அதனை வங்கி கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்து உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஸ்பெண்ட்

தவிர, தலைமை ஆசிரியர் கருப்பையா நெடுவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றிய போது அப்போது பள்ளி கல்வித்துறையில் பே மாஸ்டராக இருந்த லாரன்ஸ் என்பவரின் கையெழுத்தை போலியாக போட்டு பே மாஸ்டர் முத்திரையை போலியாக பதிவு செய்து கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று அந்த கடனை முறையாக செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து வட்டார கல்வி அலுவலர் கேள்வி எழுப்பிய போது அதற்கு முரண்பாடாக பதில் கூறினார் என்றும் சொல்லப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவரை நிதி முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.