பாலியல் வன்கொடுமை: சாக்லேட், மொட்டைமாடி… 3 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்! – போலீஸ் தீவிர விசாரணை

சென்னை நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாபு என்பவர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “என்னுடைய மகள் உட்பட 7 வயது முதல் 10 வயதுடைய மூன்று சிறுமிகள் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கின்றனர்.” எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில் சிறுமிகளை அழைத்துச் சென்றது 4-ம் வகுப்பு மாணவன் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதனால் அந்த மாணவனிடம் போலீஸார் விசாரணை நடத்தி, சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தவரின் பின்னணி குறித்த தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை

இது குறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், “எங்களிடம் புகாரளித்த பாபுவின் மகள், கடந்த சில தினங்களாக சோர்வுடன் காணப்பட்டிருக்கிறார். அதனால் அவரிடம் பாபுவின் குடும்பத்தினர் விசாரித்தனர். விசாரணையில், `நானும் என்னுடைய தோழிகளும் கடந்த 30-ம் தேதி விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது 4-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர், குறிப்பிட்ட அடுக்குமாடிக்கு வந்தால் சாக்லேட் தருவதாகக் கூறி எங்களை அழைத்துச் சென்றார். அதை நம்பி நாங்களும் அங்கு சென்றோம். அப்போது எங்களுக்கு சாக்லேட்களை ஒருவர் கொடுத்தார்.

பின்னர் எங்களை அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடிக்கு அந்த நபர் அழைத்துச் சென்றார். அங்கு யாருமில்லை. அதனால், எங்களிடம் அந்த நபர் தவறாக நடந்து கொண்டார். அதோடு இந்தச் சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது எனவும் அந்த நபர் மிரட்டினார். அதனால் கடந்த 30-ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தை வெளியில் சொல்லவில்லை. ஆனால் உடல் சோர்வு காரணமாக வீட்டில் சொல்லிவிட்டேன்’ என்று தெரிவித்திருக்கிறார். இதையடுத்து பாபுவின் மகளிடம் நாங்களும் தனியாக விசாரித்தோம். அவர் அளித்த தகவல் மற்றும் அவர் அடையாளம் காட்டிய மாணவனிடம் விசாரணை நடத்தினோம். அப்போது அந்த மாணவன், அந்த மர்ம நபர் குறித்த தகவல்களைத் தெரிவித்தார்.

நீலாங்கரை காவல் நிலையம்

ஆனால் அந்த மாணவனுக்கு அந்த நபர் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவில்லை. அதனால் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து, அந்த நபர் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம. மாணவன் மற்றும் சிறுமிகள் அளித்த தகவலின்படி விசாரித்தபோது அந்த நபர் தலைமறைவாக இருப்பது தெரியவருகிறது. அதனால் அவரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று சிறுமிகள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த நபரிடம் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

பாலியல் கொடுமை

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தரப்பில் பேசியவர்கள், “கடந்த 30-ம் தேதி நடந்த இந்தக் கொடூர சம்பவம் குறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றோம். ஆனால் அங்கிருந்த போலீஸார் மெத்தனமாகச் செயல்பட்டனர். இதையடுத்து உயரதிகாரிகளின் கவனத்துக்கு இந்த தகவலைக் கொண்டு சென்ற பிறகே, வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள்” என்றனர்.

சாக்லேட் கொடுத்து மூன்று சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.