சென்னை: மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடாமல் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என சென்னையில் நடந்த பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் இன்று பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட அரசியல் தீர்மானங்கள் குறித்து அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாப்பதில் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயல்பாகவே மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுவதை உறுதிசெய்கிறது. அதற்கேற்ற வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் அமைக்கப்பட்டதன் நோக்கம் ஒட்டுமொத்த இந்தியாவின் அரசு நிர்வாகம் எந்த சிக்கலும் இல்லாமல் இயங்க வேண்டும் என்பதுதான். இதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொண்டு செயல்படும் வரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகவே மாநில அரசுகளின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. நெருக்கடி நிலை காலத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப் பட்டியலில் இருந்த 5 பொருட்கள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அப்போது இது தற்காலிக நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பின் அரைநூற்றாண்டு ஆகப்போகும் நிலையில் இன்றுவரை அந்த 5 பொருட்களும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவில்லை. மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிகள் மாறினாலும் கூட, மாநில அதிகாரத்தைப் பறிக்கும் போக்கு மட்டும் மாறவே இல்லை.
தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கும், தமிழர்கள் தங்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும் கருதிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தடைசெய்யப்பட்டது ஆகிய அனைத்திற்கும் மாநிலப்பட்டியலில் இருந்த 5 பொருட்கள் மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது தான் காரணம் ஆகும். இந்த அநீதிக்கு எதிராக போராடவேண்டியது மாநிலக்கட்சிகளின் கடமை ஆகும். அந்தக் கடமையை பா.ம.க. மிகச்சரியாக நிறைவேற்றி வருகிறது.
நாடாளுமன்ற மக்களவையில் பா.ம.க-வுக்கு போதிய பிரதிநிதித்துவம் இருந்த காலங்களில் எல்லாம் மாநில சுயாட்சி உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் குரல்கொடுத்தும், போராடியும் வந்திருக்கிறது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததில் முதன்மை காரணமாக இருந்தது பா.ம.க.வுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருந்ததுதான்.
மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாத போதெல்லாம், சமூக நீதிக்கும், தமிழகத்தின் நலன்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த உண்மைகள் சொல்லும் பாடம் என்னவெனில், மக்களவைத் தேர்தல்களில் பா.ம.க.வின் வெற்றி தமிழ்நாட்டின் நன்மை என்பதுதான். அதனால்தான் 2024 மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, அதற்கான உத்திகளை வகுத்து பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது.
அதன் ஒருகட்டமாக, 2024 மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரத்தை வழங்குகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.