வாரணாசி: கியான்வாபி மசூதி வளாகத்தில் உள்ள தெய்வங்களை வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, பல தசாப்தங்களுக்கு பின்னர் இந்துக்கள் முதல் முறையாக மசூதியின் தெற்கு பாதாள அறையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் வழிபாடு நடத்தினர்.
வழிபாடு நடப்பதற்கு முன்பாக காவல் ஆணையர் அசோக் முதா ஜெயின் மற்றும் கோட்ட ஆணையர் கவுசால் ராஜ் சர்மா ஆகியோருடன் நீண்ட ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். முன்னதாக, இது குறித்த வழக்கில் நேற்று (புதன்கிழமை) தீர்ப்பளித்த மாவட்ட நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷா, கடந்த 1993-ம் ஆண்டுக்கு முன்பு அங்கு வழிபாடு செய்து வந்த சோம்நாத் வியாஸ் குடும்பத்தினர் கியான்வாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் மீண்டும் பூஜை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
முன்னதாக, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி உள்ள கியான்வாபி மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மசூதிக்குள் உள்ள கோயிலின் அர்ச்சகருடைய வாரிசுதாரர் சைலேந்திர குமார் பதக் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், ‘கியான்வாபி மசூதியில் கீழ்தளத்தில் உள்ள 7 அறைகளில் ஓர் அறையில் உள்ள தெய்வங்களுக்கு தனது தாத்தா சோம்நாத் வியாஸ் பூஜை செய்து வந்தார். 1993-ம் ஆண்டு முதல் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, அங்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும்’ என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷா நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர குமார் பதக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், ‘கியான்வாபி மசூதியின் கீழ்த்தளத்தில் உள்ள வியாஸ் கா தேகனா என்ற இடத்தில் இந்துக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் 7 நாட்களுக்குள் மேற்கொள்ள நீதிமன்றம் உத்ரதவிட்டுள்ளது. எனவே, இன்னும் 7 நாட்களில் இந்துக்கள் அங்கு சென்று வழிபட முடியும். அங்குள்ள தெய்வங்களுக்கு பூஜை செய்ய ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது’ என தெரிவித்தார்.
அதேநேரத்தில், வாரணாசி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக கியான்வாபி மசூதி தரப்பு தெரிவித்துள்ளது.