கேரள மாநிலம், ஆலப்புழா வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க மாநில ஓ.பி.சி அணி செயலாளர் வழக்கறிஞர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன், கடந்த 2021 டிசம்பர் 19-ம் தேதி காலையில் அவரது வீட்டில் வைத்து கொலைசெய்யப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்த அந்தக் கொலை அதிர்வலையை எற்படுத்தியிருந்தது. அரசியல் பழிக்குப்பழியாக நடந்த அந்தக் கொலை வழக்கில், எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புகளைச் சேர்ந்த 15 பேர் கைதுசெய்யப்பட்டனர். அந்த வழக்கு மாவேலிக்கரை அடிஷனல் டிஸ்ட்ரிக்ட் செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என கடந்த 20-ம் தேதி கோர்ட் தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனையை நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவி கடந்த 30-ம் தேதி அறிவித்தார். அதில், ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலையில் ஈடுபட்ட 15 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஒரு வழக்கில் அதிகமானோருக்கு மரண தண்டனை விதித்துள்ளது கேரளாவில் இதுவே முதன்முறை எனக் கூறப்பட்டது.
அந்த தீர்ப்பை ரஞ்சித் ஸ்ரீனிவாசனின் குடும்பத்தினர் வரவேற்றனர். 770 நாள்கள் காத்திருப்பு முடிவுக்கு வந்ததாகவும், கோர்ட் தீர்ப்பு ஆறுதலாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். மேலும் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் கோர்ட் தீர்ப்பு திருப்தியளிப்பதாக டி.ஜி.பி ஷெய்க் தர்வேஷ் சாகிப் தெரிவித்திருந்தார். ஆலப்புழா மாவட்ட முன்னாள் எஸ்.பி-யும், வி.ஐ.பி பாதுகாப்புப் பிரிவு துணை கமிஷனருமான ஜெயதேவ் தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணைக் குழுவினருக்கு வெகுமதி அளிக்கவும் டி.ஜி.பி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் 15 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவியை விமர்சித்தும், சிலர் மிரட்டல் தொனியிலும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு எஸ்.ஐ தலைமையில் ஐந்து போலீஸார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஆறு பேர் மீது ஆலப்புழா சௌத் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.