வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும், எந்த திட்டம் வந்தாலும், அதில் குறை இருப்பது தவிர்க்க முடியாதது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களும் இயக்கப்பட வேண்டும் என கடந்த ஜன.,24ல் போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பஸ்கள் இயக்க வேண்டும் என்ற உத்தரவு தொடர்பான பிரச்னையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ரூ.400 கோடியில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. தூரத்தை தவிர வேறு எந்த அசவுகரியமும் இல்லை” என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதி, ”எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. எந்த திட்டம் வந்தாலம் அதில் குறைகள் இருப்பதை தவிர்க்க முடியாது. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் – அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி அதன் விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்.,7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement