Maheesh Theekshana: இலங்கை அணியின் நட்சத்திர வீரராகவும், கடந்த சில சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளராகவும் இருப்பவர் மகேஷ் தீக்ஷனா. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை வீரராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரராக அறிமுகமானார்.
இவர் மிடில் ஓவர்களில் மட்டுமின்றி பவர்பிளே ஓவர் முதல் டெத் ஓவர் ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் பந்துவீசக் கூடிய திறன் படைத்தவர் எனலாம். இந்த திறனோடு சுழற்பந்துவீச்சாளர் கிடைப்பது ஒரு அணிக்கு ஜாக்பாட் என்றே கூறலாம். உதாரணத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடும் வருண் சக்ரவர்த்தியும், சுனில் நரைனும்.
மிஸ்ட்ரி ஸ்பின்னரா தீக்ஷனா…
தீக்ஷனா மிஸ்ட்ரி ஸ்பின்னர் என்றழைக்கப்பட்டாலும் அவர் சிஎஸ்கே அணிக்கு மேலே குறிப்பிட்ட இருவர் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினாரா என்றால், இல்லை என்றுதான் சொல்லியாக வேண்டும். குறிப்பாக, 2022ஆம் ஆண்டு சிஎஸ்கேவில் அறிமுகமான இவர், அந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
2023ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும், அதில் தீக்ஷனாவின் தாக்கம் என்பது பெரியளவில் இல்லை என்பதை விக்கெட்டைகளை பார்த்தாலே தெரிந்திருக்கும். குறிப்பாக, உலகளவில் பெரிய தாக்கம் செலுத்தி வரும் மிட்செல் சான்ட்னரை பெவிலியன் வெளியே அமரவைத்து தீக்ஷனாவுக்கு தோனி வாய்ப்பளித்து வந்தது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வந்தது.
பந்துவீச்சு கிடையாது
நடந்து முடிந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி, ரச்சின் ரவீந்திராவையும் எடுத்துள்ளது. இவர் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக் கூடியவர். இவரின் வருகை சான்ட்னரின் இடத்திற்கு மட்டுமின்றி, தீக்ஷனாவின் இடத்திற்கும் சற்று பங்கம் வந்துள்ளது எனலாம். இது ஒருபுறம் இருக்க, தீக்ஷனா கடந்த சீசனின் இறுதியில் தோனி தன்னிடம் கூறிய பகிரங்க கருத்தை இங்கு தெரிவித்துள்ளார்.
அதில்,”கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டி வெற்றிக்கு பிறகு, நானும் பத்திரனாவும் உடனடியாக நாடு திரும்ப வேண்டியிருந்தது. இறுதிப் போட்டிக்குப் பிறகு, சிஎஸ்கே தரப்பில் விருந்து வைக்கப்பட்டது. அதில் இருந்து நாங்கள் விடைபெற இருந்தபோது கேப்டன் தோனியை சந்திக்க சென்றோம். அப்போது அவர் என்னை ஆறத்தழுவிக்கொண்டார். அடுத்த முறை உனக்கு பந்துவீச்சு கிடையாது, பேட்டிங் மற்றும் பீல்டிங் மட்டுமே” என கூறினார்.
தோனியின் நல்ல அம்சம் இதுதான்…
கடந்த ஆண்டு, பெரியளவில் நான் நன்றாக விளையாடவில்லை. நான் 4-5 கேட்ச்களை களத்தில் கோட்டைவிட்டேன். அதற்கு நான்தான் பொறுப்பு. இருப்பினும், சென்னை அணி என் மீது நம்பிக்கை வைத்தது. அவர்கள் என்னை வெளியே அமர வைக்கவில்லை. எனவே, தோனியுடன் விளையாடுவது எளிமையானது. ஒருவர் நிச்சயம் தவறு செய்வார் என்பது அவருக்கு தெரியும். இருப்பினும் அவர்களின் தவறில் இருந்து மேம்படுத்துவது எப்படி என்பதுதான் அவரின் யோசனையாக இருக்கும். இது அவரின் நல்ல அம்சம்.
…கடந்த சீசனில் நான் டெத் ஓவர்களில் கூட பந்துவீசினேன், காரணம் அவருக்கு நம்பிக்கை இருந்தது. அவருக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது, ஒரு பந்துவீச்சாளராக எனக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. இருப்பினும், அதில் கிடைக்கும் பலன்களுக்கும் முடிவுகளுக்கும் அவர் பொறுப்பேற்கிறார். அவருடன் விளையாடுவது உங்களிடம் ஒரு நம்பிக்கையை அதிகரிக்கும். அவருக்கு கீழ் விளையாடுவது எனக்கு சிறந்த அம்சமாகும். இது எனது கிரிக்கெட் வாழ்வில் ஒரு சிறந்த வாய்ப்பாகும்…” என பேசி உள்ளார்.