வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாரணாசி: வாரணாசியில் ஞானவாபி வளாகத்தின் பாதாள அறையில் ஹிந்து பூஜாரியின் குடும்பத்தார் வழிபாடு செய்ய, மாவட்ட நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து ஞான்வாபி மசூதி கமிட்டி அலகாபாத் ஐகோர்ட்டில் மனு செய்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி ஞானவாபி வளாகத்தில் ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது மசூதி வளாகம் கட்டப்பட்டதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளதால்,, அதை ஹிந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டு, ஆய்வறிக்கையின்படி கோயில் இடிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், ஞானவாபி வளாகத்தின் தரை தளத்துக்கு அடியில் உள்ள நான்கு பாதாள அறைகளில் ஒரு அறையில் பூஜை செய்ய அனுமதி கோரி முன்னாள் பரம்பரை பூஜாரி சோம்நாத் வியாசின் பேரனான சைலேந்திர குமார் பதக், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அந்த இடத்தில், பூஜாரி சோம்நாத் வியாசின் குடும்பத்தினர் பூஜைகள் செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதன்படி, காசி விஸ்வநாதர் கோவில் பாதாள அறையில் பூஜைகள் செய்து இன்று வழிபாடு நடத்தினர்.
இந்நிலையில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரியும், பூஜைக்கு தடை கோரியும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஞானவாபி மசூதி கமிட்டி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement