கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 5 பேரை டெல்லி காவல்துறை கைது செய்தது. இதில், கர்நாடக பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹாவின் நுழைவு அனுமதிச்சீட்டுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து, போராட்டத்தை முன்னெடுத்த சாகர், மனோரஞ்சன், நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தை முன்னெடுத்த நீலம் தேவி, அமோல் ஷிண்டே, டெல்லி காவல் நிலையத்தில் சரண்டரான லலித் ஜா ஆகியோரை டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது.
அவர்களின் இந்தப் போராட்டத்துக்கான காரணம் குறித்து பேசிய போது, “வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை, தற்போது வரை தொடர்ந்துகொண்டிருக்கும் மணிப்பூர் வன்முறைக் கலவரம் உள்ளிட்ட விவகாரங்களில் அரசு விவாதத்தை முன்னெடுத்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை கவனம் ஈர்க்க இந்த அத்துமீறல் மேற்கொள்ளப்பட்டது” எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். அதில், கைது செய்யப்பட்ட ஒவ்வோர்வரிடமும் காவல்துறை சுமார் 70 வெற்றுப் பக்கங்களில் கையொப்பமிட வற்புறுத்தியதாகவும், மேலும், தேசிய அரசியல் கட்சிகளுடனான தொடர்பால்தான் இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டு கையெழுத்திட சித்திரவதை செய்யப்பட்டதாகவும், மின்சார ஷாக் கொடுக்கப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை மீது குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
மேலும், அவர்களில் இருவர் அரசியல் கட்சி – எதிர்க்கட்சி அரசியல் தலைவருடனான தொடர்பு பற்றியும் எழுத கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர். இது தொடர்பாக டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு பதிலளிக்க கால அவகாசம் கோரியது. அதனடிப்படையில், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார்.