IND vs ENG, Shoaib Bashir: இந்தியா – இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (IND vs ENG Test Series) விளையாடி வருகின்றன. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (பிப். 2) விசாகப்பட்டினம் மைதானத்தில் தொடங்க உள்ளது.
முதல் டெஸ்டில் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடியிருந்தாலும், இந்திய அணி (Team India) இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் சில சொதப்பல்களை செய்ததே தோல்விக்கு வித்திட்டது எனலாம். பாஸ்பால் அணுகுமுறையை முன்வைத்து இங்கிலாந்து டெஸ்ட் அணி இந்திய மண்ணிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக, அந்த அணி வழக்கம்போல், போட்டிக்கு ஒருநாள் முன்னரே தனது பிளேயிங் லெவனை (England Playing XI) அறிவிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. அந்த வகையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த போட்டியின் பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றத்தையும் அந்த அணி செய்யவில்லை. குறிப்பாக, 10ஆவது மற்றும் 11ஆவது இடத்தில் மட்டுமே மாற்றம் கொண்டு வந்துள்ளது.
கடந்த போட்டியில் விளையாடிய அதே காம்பினேஷனைதான் இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி கடைபிடிக்கிறது. அதாவது, 2 ஆஸ்தான சுழற்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள், 1 வேகப்பந்துவீச்சாளர் என முறையில் இங்கிலாந்து களமிறங்கியிருக்கிறது. மார்க் வுட்டுக்கு பதில் ஆண்டர்சனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மார்க் வுட் முதல் போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை.
மேலும், கடந்த போட்டியில் காயமடைந்த ஜாக் லீச்சுக்கு பதில் சோயப் பஷீரை (Shoaib Bashir) அந்த அணி உள்ளே கொண்டு வந்துள்ளது. விசா பிரச்னை காரணமாக சோயப் பஷீர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இங்கிலாந்து சென்று, அங்கு பிரச்னையை தீர்வு கண்டு இந்தியாவில் அணியுடன் இணைந்தார். இவர் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.
இவருக்கு வயது 20 ஆகும். இவர் நாளைய போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாக உள்ளார். இவரை எப்படி இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்தார் என்ற சுவாரஸ்ய பின்னணி தற்போது வெளியாகி உள்ளது.
பென் ஸ்டோக்ஸ் பகிர்ந்த கதை
ஊடகம் ஒன்றில் பேசிய பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) கூறுகையில்,”உண்மை சொல்ல வேண்டும் என்றால், பஷீரை சற்று நாள்கள் முன் அபுதாபியில் (இந்திய தொடருக்கான பயிற்சியின்போது) தான் பார்த்தேன். அவரை முதலில் ட்விட்டரில்தான் பார்த்தேன். கவுண்டி சாம்பியன்ஷிப் கணக்கில் X கணக்கில் பஷீர் அலஸ்டர் குக்கிற்கு எதிராக பந்துவீசும் ஒரு சின்ன வீடியோவை பார்த்தேன்.
19-year-old off-spinner Shoaib Bashir has looked very assured on first-class debut
He’s bowled beautifully to Sir Alastair Cook: here’s all 25 balls of their morning contest#LVCountyChamp pic.twitter.com/WWvkg5iLOn
— County Championship (@CountyChamp) June 11, 2023
ராப் கீ (இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர்), பிரண்டன் மெக்கலம் (டெஸ்ட் அணியின் பயிற்சியாளர்) ஆகியோர் இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் நான் பஷீரின் அந்த வீடியோவை அனுப்பினேன். மேலும், ‘இந்த வீடியோவை பாருங்கள். இதில் நாம் கொஞ்சம் கவனம் செலுத்தினால், இந்திய தொடருக்கு நமக்கு பெரும் உதவியாக இருக்கும்’ என்றேன்.
அங்கே தொடங்கியது. அதன்பின், இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான சுற்றுப்பயணத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு பயிற்சியாளர்களின் மேற்பார்வையில் பல விஷயங்களை கற்று தற்போது இங்கு வந்துள்ளார்” என்றார். கடந்த போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து ஸ்பின்னர், ஹார்ட்லி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்
ஸாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், பென் ஃவோக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்