இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் திரையரங்குளில் வெளியான திரைப்படம் ‘விடுதலை’ திரைப்படம்.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இதன் இரண்டாம் பாகமும் எடுத்து முடிக்கப்பட்டு ரிலீஸ்க்குத் தயாராகவுள்ளது. இந்நிலையில் இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் ஜனவரி 25ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நெதர்லாந்தில் நடைபெறும் 53வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு கோலிவுட்டிலிருந்து வெற்றி மாறனின் ‘விடுதலை’ மற்றும் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ படங்கள் சென்றுள்ளன. இதற்காக வெற்றிமாறன், ராம், விஜய் சேதுபதி, சூரி, நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்ட படக்குழுவினர் நெதர்லாந்திற்குச் சென்றுள்ளனர். இது சூரிக்கு கொஞ்சம் ஸ்பெஷலான தருணம். இந்த இரண்டு படங்களிலிலும் சூரி நடித்துள்ளார்.
இவ்விழாவில் ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டது. இந்நிலையில் படத்தைப் பார்த்தவர்கள் ஐந்து நிமிடங்களுக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டும் காணொலி சமூகவலைதலங்களில் வைரலாகி வருகிறது.
இந்தக் காணொளியை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது.