கொழும்பு,
இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது உடும்பு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்தது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில், டெஸ்ட் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 62.4 ஓவர்களில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் குவித்துள்ளது.
இதன் மூலம் இலங்கை 212 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின்போது உடும்பு ஒன்று கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்தது. இதனால் ஆட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. நடுவர் ஒருவரின் பெரும் முயற்சிக்கு பிறகு உடும்பு மைதானத்தை விட்டு வெளியேறியது. இதையடுத்து போட்டி மீண்டும் தொடங்கியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.